ஈரோடு அருகே சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது. இதன் காரணமாக பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீரில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்..
பெருந்துறையில் இருந்து ஈரோடு செல்லும் பிரதான சாலையில் செட்டிதோப்பு என்ற இடத்தில் சாலையில் இந்த நிலை நீடிக்கிறது. பெருந்துறை, திருவேங்கடம்பாளையம், காடபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் வழக்கமாக இந்த பகுதியில் தேங்குவதும், அப்போது மின்மோட்டார் மூலம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தண்ணீரை அப்புறப்படுத்துவதும் வழக்கம்.
ஆனால் சமீபத்தில் மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீரை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருதினங்களுக்கு முன் பெய்த மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் 3 அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது. ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலையான இந்த வழித்தடத்தில் இரு தினங்களாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கழிவு நீரில் மிதந்து சாலையை கடந்து செல்கின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் தண்ணீரில் தவறி விழுந்து விபத்து நேரிடுவதாகவும், துர்நாற்றத்துடன் தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் இடம் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை எனவும் மேலும் அருகில் உள்ள விளைநிலங்களிலும் இருதினங்களாக கழிவு நீர் தேங்கி உள்ளதால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.