பதவி உயர்வு இல்லாததால் ஏஎன்எம் பயிற்சிக்கு போக முடியாமல் தமிழகம் முழுவதும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பணியாற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு, முதன்மை அங்கன்வாடி பணியாளர் பதவி உயர்வு கிடைக்காததால், நர்ஸ் பயிற்சிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கிராமங்களில் பால்வாடி மையங்கள் துவங்கப்பட்டன. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டத்துடன் சேர்க்கப்பட்டு அங்கன்வாடி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை சார்பில் ஏஎன்எம்., பயிற்சிக்கு முதன்மை அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழகத்தில் சென்னையில் பூந்தமல்லி, எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை , தர்மபுரி , நாமக்கல் , தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள ஏஎன்எம் பயிற்சி மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு பிறகு கிராமப்புற சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டு வந்தனர். கடந்த 2020 ம் ஆண்டில் இருந்து ஏஎன்எம் பயிற்சிக்கு முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறது. குறு அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை.
நடப்பு 2022–2024-ஆம் ஆண்டுக்கு 504 பேருக்கு பயிற்சி வழங்கவதற்கான அறிவிப்பை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது. ஆனால். குறு அங்கன்வாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய போதும், அவர்களுக்கு முதன்மை அங்கன்வாடி பணியாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால் ஏஎன்எம்., பயிற்சிக்கு செல்ல முடியாமல் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகமும், வட்டாரம் வாரியாக வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் 100 முதல் 150 அங்கன்வாடி செயல்படுகிறது.
அங்கன்வாடி மையங்களில் முதன்மை அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் என இரண்டு பிரிவுகளில் பல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முதன்மை அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் என்றும், குறு அங்கன்வாடி மையத்திற்கு பணியாளர் மட்டும் உள்ளனர்.
அங்கன்வாடி மையத்தின் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவு, சத்து மாவு, முட்டை மற்றும் தானிய வகைகள் என வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட எல்லையில் வசிக்கும் குடும்பத்தின் விவரங்கள் சேகரிக்கும் பணி, சொட்டு மருந்து போடும் பணி, வாக்காளர் விவரம் சேகரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் செய்யும் அனைத்து பணிகளும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டுக்கு முன் வரை ஏஎன்எம் பயிற்சிக்கு இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யப்படுவர்.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக குறு அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு உதவியாளர் இல்லை என்ற காரணத்தால் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படவில்லை. மேலும், குறு அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். இதனால், ஏஎன்எம் பயிற்சிக்கு போக முடியாமல், ஆயிரக்கணக்கான குறு அங்கன்வாடி பணியாளர்கள் தவித்து கொண்டு இருக்கின்றனர் என்றனர்.
…சி.ராஜி- நிருபர், ஈரோடு.