Close
செப்டம்பர் 20, 2024 3:44 காலை

கந்தர்வகோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் தேவை: எம்எல்ஏ சின்னதுரை வலியுறுத்தல்

கந்தர்வகோட்டை

திருச்சியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய கந்தர்வகோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னத்துரை

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவகம் அமைக்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எம். சின்னதுரை (எம்எல்ஏ) வலியுறுத்தி உள்ளார்.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

இக்கூட்டத்தில் பங்கேற்ற  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கும் கந்தர்வகோட்டை, குன்றாண்டார் கோவில், கறம்பகுடிப் பகுதி மக்கள் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டுமென்றால் புதுக்கோட்டைக்கு அல்லது இலுப்பூருக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. இங்கு வாழும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கந்தர்வகோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

கந்தர்வகோட்டை அருகே இந்திரா நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு அனைத்து சமூகத்தையும் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. அதேநேரத்தில் அவர்களுக்கு தனி பட்டா இல்லை. அவர்களுக்கு தனி நபர் பட்டாக்களை வழங்கி அந்தப் பகுதியை சமத்துவபுரமாக அரசு உருவாக்க வேண்டும்.

கீரனூர் அருகே நல்லூர் கிராமத்தில் சத்திரத்திற்கு சொந்தமான இரண்டாயித்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம் உள்ளது.  இந்நிலத்தில் சுமார் 200 வருடங்களாக பல தலைமுறைகாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புடன் கூடிய கிணறு உள்ளது. எனவே, காலம் காலமாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே சத்திரத்திற்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலத்தில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

பொதுவாக எல்லா கிராம நிர்வாக அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பகுதியான நேரங்களில் இருப்பதில்லை. அவர்களை கிராம மக்கள் பார்த்து சான்றிதழ் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வட்டங்களிலேயே தங்கி பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிர்காவிலேலே வருவாய் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்கி அவர்களும் அங்கேயே தங்கிப் பணி செய்வததை உறுதிப்படுத்த வேண்டும் என்று எம்.சின்னத்துரை எம்எல்ஏ பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top