போக்குவத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு தொழில் சங்கம் சார்பில் வாயில்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நிதி பற்றாக்குறை என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிக்கக்கூடாது என வலியுறுத்தி அரசுப்போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் வாயில் கூட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகரக்கிளைத் தலைவர் டி.சந்தானம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க துணைச் செயலாளர்கள் எஸ்.செந்தில்குமார், வி.ஆனந்தன், கிளைச் செயலாளர் எம்.அண்ணாத்துரை ஆகியோர் பேசினர்.
போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் எம்.ஜியாவுதீன், கி.ஜெயபாலன், எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும். ஓய்வுகாலப் பயன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.