மேக்கேதாட்டு அணைகுறித்து காவிரி ஆணையம் கருத்து கூற முடியாது என்பதால் உச்சநீதிமன்றம் தானே விசாரித்து முடிவு எடுக்கவேண்டுமென சமவெளி விவசாயிகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சு பழநிராசன் வெளியிட்ட அறிக்கை: மேக்கேதாட்டு அணைத்திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணக்கு வந்தபொழுது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தனது கருத்தைப் பதிவு செய்ய அவகாசம் கேட்டதால் விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
காவிரி ஆணையம் என்பது அதன் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் மட்டுமல்ல. தொடர்புடைய அனைத்து மாநிலங்களின் பிரதிநிகளையும் உள்ளடக்கிய அமைப்பு.எனவே ஆணையத்தின் கருத்து என்பது அந்த ஒரு சில அன்றாட நிர்வாக அதிகாரிகளின் கருத்தாக இருக்க முடியாது.
ஆணையம் கூடி முடிவெடுத்தால்தான் அது ஆணையத்தின் கருத்தாக இருக்கமுடியும்.ஆனால்உச்சநீதிமன்றம் ஏற்கெனவே, காவிரி ஆணையம் இது குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
தன்னால் முடிவு எடுக்க முடியாத விடயத்தில் காவிரி ஆணையம் எப்படி கருத்துத் தெரிவிக்கமுடியம்?அதற்காக ஏன் உச்சநீதிமன்றம் காத்திருக்கவேண்டும்? எனவே தமிழக அரசு இந்த முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து காவிரி ஆணையத்தின் கருத்தை எதிர்பார்க்காமல் விசாரணையை விரைந்து நடத்தி,அதன் 2018 தீர்ப்பின்படி தமிழ்நாட்டின் சம்மதம் இல்லாமல் மேக்கேதாட்டுவில் அணைக் கட்டமுடியாது என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யக் கோர வேண்டும் என்று சு.பழனிராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.