புதுக்கோட்டை நகராட்சியின் 8 -ஆவது வார்டுக்குட்பட்ட வடக்கு 3-ஆம் வீதி மேல 4 -ஆம் வீதி சந்திப்பில் உள்ள மினி டேங்க் (சிறு மின்விசை தொட்டி) கடந்த 2 மாதங்களாக பழுதடைந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் நகராட்சி பொறியாளரிடம் அளித்த மனுவில், வடக்கு 3 ஆம் வீதி மேல 4 -ம் வீதி சந்திப்பில் அமைந்துள்ள மினி டேங்கின் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் , இதில் நிரப்பப்படும் தண்ணீரும் கசிந்து வெளியேறிவிடுகிறது.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 500 -க்கும் மேற்பட்டோர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த மினி டேங்கை புதியதாக மாற்ற நடவடிக்கை எடுத்து மக்களின் சிரமத்தை போக்க முன் வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.