Close
நவம்பர் 22, 2024 12:05 காலை

தண்ணீர் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க புதுக்கோட்டை முத்துநகர் மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

தண்ணீர் வரி விலக்கு அளிக்க புதுக்கோட்டை முத்துநகர் பகுதி மக்கள் கோரிக்கை

கடந்த 4 ஆண்டுகளாக வராத குடி தண்ணீருக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென புதுக்கோட்டை முத்து நகர் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக முத்து நகரைச் சேர்ந்த ம.கிருஷ்ணகுமார், நகராட்சி ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனுவில்,

நாங்கள் குடியிருக்கும் முத்து நகர் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக (4ஆண்டுகள்) குடிதண்ணீர் வருவது கிடையாது. இதனால் நாங்கள்  குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றோம். தண்ணீர் வராததைப் பற்றி நகராட்சி அலுவலர்களிடம் ஏற்கெனவே பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இருப்பினும் வரி வசூல் செய்பவர்கள் எங்களிடம் வரி செலுத்து மாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். வரப் பெறாத தண்ணீருக்கு வரி செலுத்துவது என்பது  எந்த விதத்திலும் சரியானது எனத் தெரியவில்லை.  ஆகவே, தாங்கள் தயவு கூர்ந்து எங்களுக்கு குடி தண்ணீர் வழங்கும் வரை  தண்ணீர் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

நில வரி தவறாமல் கட்டி வருகின்றோம்.  தண்ணீர் கிடைத்தால் தண்ணீருக்கான வரியையும் தவறாமல் கட்டிவிடுகின்றோம் என இதன் மூலம் உறுதியளிக்கின்றோம். தாங்கள் தயவு கூர்ந்து தனி மீட்டர் அமைந்து குழாய் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றேன். தங்களது நடவடிக்கை மூலம் சரியான வரியை செலுத்துவதற்கு  உதவிகரமாக இருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அதில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆணையர் நாகராஜன் கூறுகையில், வரி விலக்கு அளிக்கு அதிகாரம் நகராட்சியிடம் கிடையாது. சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகம் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். பொதுமக்கள் தண்ணீர் வரியை செலுத்துவதுதான் தீர்வு. தண்ணீர் வராதது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top