காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டுமென
ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா, ஆந்திரா போல அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையையும் மீளப்பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக்கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
வட்டத் தலைவர் ஜே.ஜெய்சிங் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜெயபாலன், துணைத் தலைவர் பி.மாரிமுத்து, பொருளாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
கேரளா, ஆந்திரா போல அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையை மீளப்பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும். குடும்ப நல நிதியை ஒர் இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
நிலுவையின்றி அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மருத்துவப்படியை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.