Close
நவம்பர் 22, 2024 7:49 காலை

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கக் கூடாதென வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அம்மா உணவகங்களிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து  சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை வட்டத் தலைவர் த.ராஜகோபாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் இரா.முத்து, ப.உஷாராணி, ந.அருள்மொழி, க.புவனேஸ்வரி, வெ.இந்திராகாந்தி, க.பிரேமலதா, மு.பானுப்ரியா, இரா.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலாளர் கு.ராஜமாணிக்கம் பேசினார். போராட்டத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பால்பிரான்சிஸ், அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வள்ளியப்பன் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் கு.சத்தி நிறைவுரையாற்றினார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை வேளையில் சிற்றுண்டிகள் வாழக்கும் திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கோ, அம்மா உணவகங்களுக்கோ கொடுக்கக்கூடாது.  அதே பள்ளியில் உள்ள சத்துணவு மையங்கள் மூலமாக வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் முதலமைச்சருக்கான கோரிக்கைகள் மனுவை புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top