திருவொற்றியூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முந்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ முந்தி விநாயகர் திருவொற்றியூரில் உள்ள பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இந்து சமயம், அறநிலையங்கள் துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கான யாகசாலை பூஜை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் ஊற்றினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்கள்
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திமுக மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, இந்து சமயம், அறநிலையங்கள் துறை இணை ஆணையர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.