Close
நவம்பர் 22, 2024 9:12 காலை

சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி

சதுரகிரி சுந்தரமகாலிங்கர்

சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் வரலாறு : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது.

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்த வன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் – திலகமதி. மனைவி சடைமங்கை.

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி, அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவி யின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந் தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித் தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத் தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி தல புராணம் கூறுகிறது.

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாக தனியாக காட்சியளிக்கிறார். மலை அருவிக்கரையில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசை நாளில் இலட்சக் கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள்.

இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை மற்றும் பதினெண் சித்தர்கள், சனி பகவான், முருகன் மற்றும் விநாயகருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இதனால் நேற்று, சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷம் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காட்டுத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதால் மீண்டும் இன்று 8 -ம் தேதி (சனி கிழமை), நாளை 9 -ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பௌர்ணமி நாள், நாளை மறுநாள் 10-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய 3 நாட்களும் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு, வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் சுந்தரமகாலிங்கம் சுவாமியின் தீவிர பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை ஞாயிறு கிழமை விடுமுறை நாளில் பௌர்ணமி வருவதால், அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top