Close
நவம்பர் 21, 2024 11:47 மணி

மணலியில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: பக்தர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி..

திருவொற்றியூர்

ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட மணலி சி பி சி எல் நகர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில்

:சென்னை மணலி சி.பி.சி.எல். நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு திருடி செல்லப்பட்ட சம்பவம் பக்தர்கள் பொதுமக்களிடம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது
மணலி சிபிசிஎல் நகரில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது.  இக்கோயிலில் ஐம்பொன்னாள் வடிவமைக்கப்பட்ட பெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது .
வைக்காடு கிராம நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த இக்கோயிலில் ஏராளமான கிராம பொதுமக்கள் தினசரி வணங்கி வந்தனர் . இரவு பூஜைக்கு பிறகு செவ்வாய்க்கிழமை இரவு கோவிலில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன
இந்நிலையில்  புதன்கிழமை காலை கோயிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர் கோயிலின் இரும்பு கேட் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மூன்று சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக மணலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மணலி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.திருடப் பட்ட ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஒரு கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top