சென்னிமலையில் உள்ள அய்யப்ப சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலையில் அய்யப்பா நகரில் உள்ளது அய்யப்ப சாமி கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயிலில் உள்ள விமானங்கள் கருவறை, மகா மண்டபம் ஆகியவை பழுது பார்க்கப்பட்டு இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த 1-ஆம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
மேலும் அன்று நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் அன்று கொடிவேரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகள் வழியாக தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அங்கு வாஸ்து சாந்தி, கோபுர கலசங்கள் வைத்தல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது . நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 2-ஆம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி வேதபாராயணம், திருமுறை பாராயணம், 3 -ஆம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5. 30 மணிக்கு மேல் 4-ஆம் கால யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
நாடி சந்தானம், மகா தீபாராதனை, கலசங்கள் ஆலயம் சுற்றி வருதல் போன்ற நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து வலம்புரி பால விநாயகர், அய்யப்ப சாமி, பாலமுருகன் ஆலய விமானங்கள் மற்றும் மூலவர் மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முருகனடிமை சுப்புசாமி தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில் அய்யப்ப சாமி கோவிலின் அர்ச்சகர் ஜி. மாணிக்கவாசக குருக்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு அபிஷேகம், தசதானம், தசதரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.