புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலய தெப்பக்குளத்தில் மாசி மகத்தையொட்டி தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் ஆலயத்தில் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து இரவில் பல்லவன் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் சாந்தநாதசுவாமி- வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் உலா வந்தனர்.
தெப்ப உற்சவத்தைக் காண பல்லவன் குளத்தின் மூன்று கரைகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தெப்பம் வலம் வரும்போது பக்தர்கள் சிவ, சிவா… என பக்தர்கள் முழக்கமிட்டு சுவாமி அம்பாளை வழிபட்டனர் . தெப்பம் கரையை வந்தடைந்ததும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாதசுவாமி சமேத, வேதநாயகி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. கீழ ராஜ வீதி உள்பட நான்கு வீதிகளிலும் சுவாமி அம்பாள் உலா வந்து ஆலயத்தை வந்தடைந்தது. நான்கு வீதிகளிலும் பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.
மாசி மகத்தையொட்டி சுவாமி தரிசனம் செய்வதற்காக சாந்தநாதர் ஆலயத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில், திருவேங்கைவாசல் சிவன் கோயில்களில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.