புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பேரையூர் ஸ்ரீ நாகநாதர் சுவாமி உடனூரை ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய பங்குனி தேரோட்டம் நடைபெற்றது இந்த தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்க போதிய பக்தர்கள் இல்லாததால் டிராக்டர் மற்றும் ஜேசிபி மூலம் இழுத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை திருக்கோயில் சார்ந்த பேரையூர் நாகநாதர் சுவாமி உடனுறை ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய பங்குனி மாத தேரோட்டம் கடந்த ஐந்தாம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவானது தொடங்கியது.
இதில் தினந்தோறும் நாகநாதர் சுவாமி உடனுறை ஸ்ரீ பிரகதாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வீதி உலா நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து வியாழக்கிழமை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ நாகநாதர்சுவாமி உடனுறை பிரகதாம்பாள் சுவாமியை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட நிகழ்வில், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர்(கூ.பொ) சூரியநாராயணன், உதவி ஆணையர் தி. அனிதா முன்னிலையில் தேரோட்டம் தொடங்கியது. கோயில் நிர்வாக அலுவலர்கள் முத்துக்குமரன்(அறந்தாங்கி), சந்திரசேகரன்(பெரம்பூர்), சுதா(மனோன்மணியம் கோயில்) பேரையூர்கோயில் ஆய்வர் திவ்யபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேரை இழுப்பதற்கு போதிய பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இல்லாததால் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்டத்தில் சுற்றியுள்ள ஐந்து கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயிலின் சிறப்பு…
புதுக்கோட்டை பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர் நாகநாதசுவாமி கோயில். இக்கோயில் இம்மாவட்டத்தில் முக்கியமானதொரு பிரார்த்தனை தலமாகும்.
நாகநாதசாமி கோயில் கி.பி.12-13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றிலுள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும் மேற்கே லிங்கோத்பவரும் வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர்.
பல்லவராயர் இப்பகுதியை ஆண்டு வந்த போது இவ்வூர் “பேரையூர் நாடு” என சிறப்புடன் விளங்கியது. பிள்ளைபேறு இல்லாதவர்கள். இக்கோயில் வழிபட்டால் பிள்ளை பேறு கிட்டும் என்பது ஐதீகம்
ஆகவே பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, ஐந்து தலையுடன் காணிக்கையாக கூடிய நாகச்சிற்பங்களை, (கல், வெள்ளி, தங்கத்தில்) வைத்துச் செல்லுகின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேறி யதால் வைத்துள்ள நூற்றுக்கணக்கான நாக சிற்பங்களை இங்கு காணலாம்.