Close
செப்டம்பர் 20, 2024 3:44 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு….

புதுக்கோட்டை

தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் புவநேஸ்வரி அம்மன்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில சித்திரை முதல்நாள் (சோபகிருதுவருடம்) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அதிஷ்டானத்தில்  தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாராதனை  நடைபெற்றது.

தமிழ்புத்தாண்டு விழாவை முன்னிட்டு அதிகாலை முதல்     கோ பூஜை,   திருப்பள்ளி எழுச்சி   மற்றும் சிறப்பு ஹோமம், நடந்தது.    பின்னர்    ஸ்ரீபுவனேஸ்வரி   அம்மனுக்கு பாலபி ஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட  பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம்,  கலசாபிஷேகம்,  சிறப்பு அலங்காரம்   மற்றும் தீபாராதனை ஆகிய நிகழ்வுகள்    பூஜ்யஸ்ரீ  ப்ரணவானந்த சுவாமிகள் முன்னிலையில்   நடந்தது.

பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிகள்  பக்தர்களுக்கு   தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துகள் கூறி  அருளாசி வழங்கினார்.

புதுக்கோட்டை
பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய பூஜ்யஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிகள்

 தொடர்ந்து      ஸ்ரீ சகஸ்ரநாம  பாராயணம் வாசிக்கப்பட்டது. மேலும்  அதிர்ஷ்டானத்தில் அருள்பாலிக்கும் அஷ்ட மஹா லெட்சுமிக்கும்  பஞ்சமுக விநாயகர்,     பஞ்சமுக ஆஞ்சநேயர், திருமுருகன் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு  அலங்காரம்  மற்றும்  தீபாராதனை     நடைபெற்றது

இதில், மருத்துவர் ராஜமாணிக்கம், மருத்துவர் பத்மினி இண்டேன் கேஸ்  ஸ்ரீதர், புவனேஸ்வரி தங்கமாளிகை   நடராஜன்,  கல்வியாளர் ரொட்டேரியன் முத்துராமன் மற்றும் ஆன்மீக ஆர்வலர்கள்  திரளான    பக்தர்கள்  கலந்து கொண்டு  வழிபட்டனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை
புத்தாண்டு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள்

புதுக்கோட்டை நகரில் சாந்தநாதசுவாமி கோயில், தெற்கு நான்காம் வீதியிலுள்ள தண்டாயுதபாணி கோயில், திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் கோயில், திருவப்பூர் முத்துமாரியம்மன்கோயில்,குமரமலைபாலதண்டாயுதபாணி, கோவில் உள்பட புதுக்கோட்டை நகரில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல், திருவரங்குளம் சிவன் கோயிலில் விநாயகர், சுவாமி அம்பாள், தெட்சினாமூர்த்தி, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை, மகாலெட்சுமி, குருபகவான், கருப்பர், ஸ்ரீபிடாரி அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதைப்போல, பொற்பனைக்கோட்டை பொற்பனை முனீஸ்வரர் கோயில், புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலை முத்துமாரியம்மன், திருமயம் சிவன்கோயில்,

இலுப்பூரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில், தரம்தூக்கி பிடாரி அம்மன்கோயில், இருந்திரப்பட்டி முத்துமாரி அம்மன்கோயில், அன்னவாசல் அருகே தான்றீஸ்வரம் சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமி கோயில்,

அன்னவாசல் தர்மசம்வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோயில், திருவேங்கைவாசல் பிரகதம்பாள் உடனுறை வியாக்ர புரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தமிழ் புத்தாண்டு குறித்து  மகாதேவசாஸ்திரிகள்  கூறியதாவது: தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை சமைத்து படையலிட வேண்டும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்கும் உணவுகளை சமைப்பது சிறப்பு.  அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே  இவ்வாறு அறுசுவை உணவினை புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.

பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம். பஞ்சாங்கத்திற்கு பூஜை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும்.

பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும்.  சித்திரை வருடப்பிறப்பன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நடத்தப்படும்து.

பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது ஐதீகம்.

சித்திரை புத்தாண்டு அன்று நமது குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்யங்களும் நம்மை தேடி வரும்.

வாழ்க்கை செழிப்புடன் அமையும். பஞ்சாங்கம் படித்தல் சித்திரைமுதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் காரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும்.

அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும். தானம் செய்தால் தோஷங்கள் நீங்கும் புது வருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம்.  ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும்.

சித்திரை கைநீட்டம் சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர் களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top