Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

தமிழ்நாட்டில் 81 சித்தர்கள்- குருமார்கள் ஜீவசமாதியான கிண்ணிமங்கலம்

தமிழ்நாடு

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகேயுள்ள கிண்ணிமங்கலம் குரு அருளானந்தர் மடம்

தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த இடம், ஜீவசமாதியான இடம் என பல உள்ளன. ஆனால் 81 சித்தர்கள், குருமார்கள் ஜீவசமாதி ஆன ஒரே இடம், மதுரை மாவட்டத்தில் உள்ள கிண்ணிமங்கலம்.  இங்குள்ள ஏகநாத சுவாமி கோவில், பள்ளிப்படை, குரு மடம் என பல பெயரால் அழைக்கப்படு கிறது.

சின்னமனூர் என்று அழைக்கப்படும் அன்றைய அரிகேச நல்லூரில், சைவ வேளாளர் குடும்பத்தில்  பிறந்தவர் அருளானந்தர். இவரது பெற்றோர்கள் இவரை போகரின் சீடர் புலிப்பாணி இரண்டாம் சித்தரிடம் அனுப்பினர். அங்கு அருளானந்தர் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவருடன் சேர்த்து 17 சீடர்களை வடக்கே அனுப்பி, இன்னும் பல கலைகள் கற்கும்படி அவர்களின் குரு பணித்தார்.

ஆனால் அருளானந்தரோ, காகபுஜண்ட சித்தர் தவம் செய்த குகையில் 48 நாள் தவம் இருந்தார். அங்கே இருந்த ஊற்று நீர் மற்றும் மூலிகை களை பயன்படுத்தி காயகல்பம் தயாரித்து உட்கொண்டார். அதன்பிறகு பலருக்கு பல நல்ல காரியங்களை தன்னுடைய தவப் பலனால் செய்தார்.

தன் தவவழிமையால் அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்று தான் ஜீவ சமாதி அடைவதற்குரிய காலம் கனிந்துவர தான் சமாதிநிலை அடைவதற்கான யோகபூமியைத் தேர்தெடுக்கத் திருவுளம் கொண்டார்.

நாகமலையில் நாகதீர்தத்திற்கு அருகாமையில் தவம் செய்து வந்தார். அப்பொழுது அங்கு மாடு மேய்க்கவரும் சிறுவனிடம் தூரில்லாத காந்தக் கிண்ணியைக் கொடுத்து காராம்பசுவில் பால் கரந்துவருமாறு கூறியுள்ளார். வியப்படைந்த அச்சிறுவன் ஓட்டைக் கிண்ணியில் எப்படி சாமி பால் கரந்து வரமுடியுமெனக் கேட்டான். அதற்கு சுவாமிகள் போய் கரந்துபார் என்றார்.

சிறுவனோ தயக்கத்துடன் சென்று பாலைக்கரக்க அப்பால் ஒரு துளி கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது. ஆச்சரியம் அடைந்த சிறுவன் சுவாமி அவர்களிடம் பாலைக் கொடுத்து வணங்கினான். பின்னர் வீடு திரும்பிய அச்சிறுவன் அன்று நடந்த அதிசியத்தை ஊர்மக்களிடம் கூறினான். அது கேட்ட மக்கள் அனைவரும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். இச்செய்தி  சுற்றியுள்ள ஊர்களுக்கெல்லாம் பரவியது.

நாகமலையைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர் திரண்டு சென்று சுவாமி அவர்களை வணங்கி அருளாசி பெற்றனர். பின்னர் ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சுவாமிகள் தாம் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்பதை இந்த காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் எனக்கூறி சக்திவாய்ந்த இந்தக் காந்த கிண்ணியை இங்கிருந்து எறிகிறேன் அது எங்கு விழுகிறதோ அங்கு தான் நான் வந்து தங்கி அங்கேயே ஜீவசமாதி அடையவும் திருவுளங்கொண்டுள்ளேன் எனக்கூறினார்.

அதுகேட்டு அங்கிருந்த கிராமத்தினர்கள் எல்லாம் தத்தமது ஊருக்கு அந்தப் பேரு கிடைக்கவேண்டுமென மனமுருகி வேண்டினர். சுவாமிகள் அருள் நிறைந்த அந்த காந்தக் கிண்ணியை ஆனந்தமாக ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்தார். அந்தக் கிண்ணியோ மங்கலப்பட்டி என்று வழங்கப்பட்ட ஊருக்கு அருகில் வந்து விழுந்தது.

கிண்ணம் விழுந்த இடத்தை சுத்தம் செய்து சித்தர் தவம் இயற்றுவதற்காக வழங்கலாம் என்று அவரது சீடர்கள் நினைத்தனர். ஆனால் புற்று  இருந்ததால் அந்த இடத்தை சுத்தம் செய்யாமல்  சித்தரிடம் சென்று விஷயத்தை கூறினார்கள்.

சித்தர் புற்றுக்கு அருகில் வந்தார், அந்த புற்றுக்குள் ஒரு ராஜ நாகம், தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பதை உணர்கிறார். உடனே பாம்பாட்டி சித்தரின் சர்ப்பக் கூத்து மந்திரம் சொல்லி நாகத்திற்கு முக்தி அளித்தார்.

கிண்ணி வந்து விழுந்ததால் அன்று முதல் அந்த இடம் கிண்ணிமங்கலம் என்ற திரு நாமத்தால் வழங்கப்படுகிறது. சுவாமிகள் அங்குள்ள குட்டிச் சுவரில் அமர்ந்து கொண்டு கூடி இருந்தவர்களுக்கெல்லாம் மண்ணை அள்ளி அவரவர் விரும்பிய பதார்த்தங்களை தன் அஷ்டமாசித்தியால் வரவழைத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த மன்னன் தான் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி இல்லாமல் கூட்டமாகக் கூடி நின்ற மக்களை பார்த்து வெகுண்டேழுந்தான். இதற்கு காரணமான சுவாமி அவர்களிடம் வந்த மன்னன், ஒரு குட்டி சுவரில் அமர்திருக்கும் சாமியாராகிய உனக்கு அவ்வளவு செருக்கா! நான் வருவது கூட உன் கண்களுக்குத் தெரியவில்லையா? எனக் கோபத்துடன் கேட்டான்.

அது கேட்ட சுவாமிகள் ஆனந்தப் புன்னகையுடன் தான் அமர்திருந்த குட்டிச் சுவரை தன் திருகரத்தால் தட்டினார் அவரது தவ வலிமையால் குட்டி சுவரு கடிவேகக் குதிரையானது. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் ஆச்சரியமும் கோபமும் அடைந்தான்.

எங்கே உன் குதிரையையும் என் குதிரையையும் ஓடவிடுவோம் எந்த குதிரை ஜெயிக்கிறது என பார்ப்போம் என்றான். போட்டிக்கு ஒத்துக்கொண்டார் சுவாமிகள். இரு குதிரைகளையும் ஓடவிட்டனர். சுவாமி அவர்களின் குதிரையோ சற்று தூரம் ஓடுவதும் சற்று விண்ணில் பறப்பதும் பின்னர் தரையில் ஓடுவதுமாக அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

தரையில் ஓடும் குதிரையைப் பார்த்திருக்கிறேன் விண்ணில் பறக்கும் அதிசயக் குதிரையை இங்கு தான் கண்டேன் என கூறி சுவாமிகளின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கித் தான் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுமாறு வேண்டி நின்றான்.

அருள்நிறை அமுதக்கடலான சுவாமிகள் ஆனந்த புன்னகையுடன் தன் தவறை உணர்ந்த மன்னனை மன்னித்து அருளாசி வழங்கினார்கள். மன்னன் சுவாமி அவர்களிடம் பணிவுடன் தங்களுக்கு ஏதாவது திருப்பணி செய்ய விரும்புவதாகக் கூறி, சுவாமி அவர்களின் கட்டளையை வேண்டி நின்றான்.

சுவாமி அவர்கள் அவன் வேண்டுகோளை ஏற்று தான் ஜீவ சமாதி அடைய உள்ளதாகவும் அதற்கு அழகிய திருகோயிலை நிர்மாணிக்கும் படி பணித்தார். மேலும் மடாலாயத்திற்கு மானியமாக தன் குதிரை கால் பதித்து வட்டமிட்ட நிலத்தினை வழங்குமாறும் கட்டளையிட்டார். சுவாமி அவர்களின் கட்டளையை சிரமேற்கொண்ட மன்னன் கோயில் திருப்பணிகளை ஆரம்பித்தான். சுவாமிகள் மடாலயத்தின் அக்கினிமூலையில் அக்கினி தீர்த்தத்தை உருவாக்கினார்.

அங்கு மடாலய திருப்பணிக்கு வந்த சிற்பிகளில் ஒருவன் கண் பார்வையற்றவனாக இருந்தான். அவனை கண்ணுற்ற ஸ்வாமிகள் தான் உருவாக்கிய அக்கினி தீர்த்தத்தில் குளித்து வர பணித்தார். அவ்வாறே அந்த சிற்பியும் செய்ய கண் பார்வை பெற்று பேருவகை கொண்டான். காணொளி தந்த கருணை கடலுக்கு சிற்றுளியால் ஒளி வீசும் பல அழகிய சிற்பங்கள் நிறைந்த இந்த மடாலயத்தை அமைத்து கொடுத்தான்.

சுவாமிகள் ஜீவனை சிவனாக்கி அன்பே சிவமயமாய் அமர்ந்து அருள்பாலிக்க திருவுளம் கொண்டு கிண்ணிமங்கலம், சோழவந்தான், மதுரையில் காகாதோப்பு, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஐந்து ஊர்களில் மடாலயங்கள் நிறுவினார்.

தன் சீடர்களை அழைத்து வைகாசி மாதம் பூரம் நட்சத்திரமும் அஷ்டமி திதியும் கூடிய சுப தினத்தில் ஜீவ சமாதி அடையப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார். அவ்வாறே குறித்த சுப தினத்தில் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணையான சுவாமிகள் ஜீவ ஜோதியாக ஜீவா சமாதி எய்தி ஒரே நேரத்தில் மேலே குறிப்பிட்ட ஐந்து ஊர்களிலும் உள்ள தன் அடியவர்களுக்கு அருள் காட்சியளித்து ஆட்கொண்டு அருளிக்கொண்டிருகின்றார்.

கிண்ணி கிடந்தத இடத்தில் கற்பூர் வில்வ மாமும் இருந்தது. இன்றும் ஏகநாத சுவாமி ஆலயத்தில் தல விருட்சமாக இந்த கற்பூர வில்வ மரம் இருக்கிறது. அதோடு அந்தப் புற்று ராஜநாக சமாதியாகவும் உள்ளது.  இந்த சமாதியை  வேண்டி அருகில் உள்ள ஊற்று நீர் மற்றும்   சித்தர் மடம் தரும் மருந்து ஆகியவற்றை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .

தமிழ்நாடுஅந்த குரு எந்நாளும் தன் சிஷ்யர்களுக்கு சக்தி ஊட்ட அங்கேயே இருந்து  தன் 16 சிஷ்யர்களுக்கு சமாதி நிலையை அடைய வழிகாட்டி, தானும் அருளானந்தர் சமாதிக்கு எதிராக நந்தியாக நான் இருப்பேன் என்று சமாதி ஆனதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு
ஏகநாதசுவாமி

ஆனந்த வல்லி தாயார்  ஒரு சுற்று பிரகாரம், நந்தவனத்துடன் கூடிய சிறிய கோவிலாக, மதுரை மாவட்டம், செக்கணூரனி அருகில் திருமங்கலம் கோட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஏகநாதர் சுவாமி ஆலயம்.  அருளாளந்த சுவாமிகளின் சமாதிக்கு மேல்  ஏநாதர் என அவர் குருவால் பெயரிடப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

கருவறையில் இடது முன்பக்கத்தில் பக்கவாட்டில் ஆனந்தவல்லி தாயாரின் திருஉருவமும் லிங்கத்திற்கு வலப்புறம் தாயாரின் எதிரில் குருவின் திருவுருவமும் பிர திஷ்டை செய்யப்பட்டுள்ளது.  சிவலிங்கத்திற்கு எதிரில் புலிப் பாணி சித்தரின் இரண்டாய் சீடரும் அருளாளந்த சுவாமி களின் குருவுமான சித்தரின் ஜீவ சமாதியும், அதன்மேல் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
கிண்ணமங்கலம் சித்தர் அதிஷ்டானம்

முன் மண்டபத்தில் அருளானந்த சுவாமிகளின் கிண்ணம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன் நடுவே ஊசி காந்த முனை நிறுவப்பட்டுள்ளது. கிண்ணத்தின் வட்டம் நாதமா கவும், ஊசி காந்த முனை விந்தாகவும் இருந்து அதிர்வலை களை உள்வாங்கி, அனைத்து ஜீவ சமாதிகளையும் உயிரோட்டத்துடன் வைத்திருப் பதாக நம்பப்படுகிறது.

சித்தர் பீடமானது முக்கோண வடிவில் அஉஇ என்ற தத்துவத்தைக் குறிக்கும் வகையில் நடுவில் அருளானந்தரின் சமாதியும் சிவலிங்கமும், குருவின் சமாதியும் நந்தியும், கன்னி  மூலையில் மாணிக்கவாசகத் தம்பிரானின் சமாதியும், அதன் மேல் விநாயகர் சன்னிதியும், வாயு மூலையில் சபாபதி தம்பிரா னின் சமாதியும், அதன் மேல் சுப்பிரமணியரின் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது.

16 சீடர்களில் மூன்றாவது சீடர் தான் இந்த குருமடத்தை உருவாக்கினார். இன்று 67-வது வழித்தோன்றல் குரு பரம்பரை இந்தகோவிலை பாதுகாத்து கைங்கரியம் செய்து வருகிறார். குரு பரம்பரையில் அடுத்த தயார் செய்யும் முறை மெய் சிலிர்க்கிறது.

குரு, குடும்பத்தில் பெண்கள் கருவுற்ற பிறகு நாடியைப் பிடித்து இவர் தான் அடுத்த குரு பரம்பரை என்று முன்னோர்கள்.அருளால் கருவிலேயே உணர்ந்து அந்தப் பெண்ணிற்கு மந்திர உபதேசம் செய்து இறைவனின் குழந்தையாகவே வளர்க்கின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு அனைத்து சித்துக்களையும் கற்றுத் தருவது குருவருள். இங்குள்ள மூதாதையர்கள் வேறு எங்கும் பிறக்காமல் இங்கேயே பிறப்பதாகவும் ஐதீகம்.

குழந்தை பேருக்கான மருந்துகள். பெரும் தொற்றுக் கொண்ட வர்களுக்கு அக்னி தீர்த்த ஊற்று நீர்  என  பல விஷயங்களை இங்கு இலவசமாக குருவின் அருளோடு செய்கின்றனர். தசமி நாளன்று குரு மடத்தில் உள்ள குரு பரம்பறையில் உள்ள 67-வது குருமார்கள் 15 கலைகளையும் இலவசமாக கற்றுத் தருகிறார்

ராஜ நாக சமாதி இருப்பதால் சர்ப்ப தோஷம், ஜாதகத்தில் உள்ள தோஷ நிவர்த்திகள் இலவசமாக செய்யப்படுகிறது. கோவிலை சுற்றி வரும் பொழுது காந்தக் கிண்ணத்தில் இருந்து வரும் அதிர்வலைகள் நம் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்  என மக்கள் நம்புகின்றனர்.

இங்குள்ள சிவனுக்கு பிரதோஷம், சிவராத்திரி, சமாதி நாள்  பல நாட்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top