Close
செப்டம்பர் 19, 2024 10:48 மணி

வள்ளலார் வடலூரில் தர்ம சாலை நிறுவிய நாள்: புதுகையில் கொடியேற்றி வழிபாடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்றி வைத்து வழிபாடு நடத்துகிறார், வள்ளலார் மாணவர் இல்லத் தலைவர் டாக்டர் ராமதாஸ்

வடலூர் ராமலிங்க வள்ளலார் வடலூரில் தர்ம சாலை நிறுவிய தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தின் மேல் கரையில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சன்மார்க்க கொடியேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

சன்மார்க்க கொடியினை மருத்துவர் ராம்தாஸ் ஏற்றி வைத்து வழிபாடு செய்தார். தொடர்ந்து ஞான சபையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சன்மார்க்க அன்பர்கள் நமச்சிவாயம் முனியமுத்து வாடிமனைப்பட்டி சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றுரைத்த வள்ளலார் உருவாக்கிய தருமசாலையின் வயது 154. வள்ளலார் தன் வாழ்நாளில் சத்திய சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை ஆகிய மூன்று அமைப்புகளை உருவாக்கினார்.

`பசியை ஒரு பிணி’ என்று சொன்னவர் வள்ளலார். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி. அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டது தான் இங்கு உள்ள அணையா அடுப்பு.

இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்தது.

இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கா னோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

சாதி, மதம், மொழி, இனம், தேசம் என்ற எவ்வித வேறுபாடுகளுமின்றி உலகோர் பசி போக்குவதையே பிரதான பணியாய் கொண்டு செயல்பட்டு இந்தத் தருமசாலை 155 ஆண்டுகளை நிறைவுற்று 156 -ஆம் ஆண்டில்  அடி எடுத்து வைக்கிறது.

இந்த அடுப்பை மூட்டியபோது, உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது என்று  வள்ளலார் பெருமான் கூறிய வார்த்தைகள் இன்று வரை நிலைத்து நிற்கிறது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top