புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு விழாவை நீர்நிலைகளில் உற்சாகத்துடன் மக்கள் கொண்டாடினர்.
பல்வேறு திருவிழாக்கள், முக்கிய பூஜைகள் மற்றும் தெய்வ வழிபாட்டுக்கான மாதமாக திகழ்வது ஆடி மாதம். ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு என வரிசையாக விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படும் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் குல தெய்வ வழிபாடு மற்றும் நதி, ஆற்றங்கரை வழிபாட்டை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஆடி பெருக்கு திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் மிக விமர்சையாக புதுமண தம்பதிகள் அதிகளவில் கூடி வழிபாடு நடத்தி கொண்டாடப் படுகிறது. காவிரி ஆற்றங் கரையில் புதுமண தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் நீராடியும், புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம்.
இதற்காக ஏராளமான புதுமண தம்பதிகள் தங்களது குடும்பத்தினருடன் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம்.இதனால் குடும்பம் மற்றும் விவசாயம், தொழில் செழிக்கும் என்பது ஐதீகம்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆடிப் பெருக்கு கொண்டாடப்படும் தருமபுரி, ஒகேனக்கல் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையோரம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் காவிரி உள்பட எந்த நதிகளும் ஓடாத வானம் பார்த்த பூமியான புதுக்கோட்டையில் கோயிலருகே உள்ள தெப்பக் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலருகே உள்ள பல்லவன்குளம் (சிவகங்கை) குளக்கரையில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் நூற்றுக்கணக்கான புதுமணத்தம்பதிகள் வந்து வழிபாடு நடத்தி கழுத்தில் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்,