புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
மேலும், ஸ்ரீ முத்துமாரி அம்மன் எலுமிச்சை பழம் மற்றும்அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வருகை தந்து அம்பாளை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாகம நடைபெற்றது . மேலும், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வரலட்சுமி நோன்பு குறித்து கோயில் சிவாச்சாரியார் கணேஷ் குருக்கள் கூறியதாவது:வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். நாம் தொடங்கும் வரலட்சுமி பூஜை தடையின்றி நடைபெற இந்த வழிபாடு அவசியம். அதன்பிறகே வரலட்சுமியை பூஜை செய்து வணங்க வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு விநாயகர் பூஜையை முதலில் செய்ய வேண்டும். அம்பாள் முன்பு மஞ்சள் நூலில் ஏதாவது ஒரு பூவைக்கட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள் என்று வைக்க வேண்டும். சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, மல்லி, அல்லி, தாமரை, அரளி, சண்பகம், தாழம்பூ என்று எல்லாவகை பூக்களை வைத்தும் பூஜை செய்யலாம்.
வரலட்சுமி பூஜையில் மஞ்சள் தடவிய நூல்களில் 9 முடிச்சுகள் போட்டு மஞ்சள் கயிற்றை தயார் செய்ய வேண்டும். இதில் உள்ள ஒன்பது முடிச்சுகளும் அஷ்டலட்சுமிகளையும், வரலட்சுமியையும் குறிக்கும். அந்த கயிறை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூஜை போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், இட்லி, மகாநைவேத்தியம் இவைகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.
ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப் படுகிறது. இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வழிபட்டவர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்றார்.