Close
செப்டம்பர் 19, 2024 10:54 மணி

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம்- உறியடித்தல் போட்டி

புதுக்கோட்டை

திருவப்பூர் ராதா ருக்மணி சமேதர வேணுகோபால சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வழுக்கு மரம் மற்றும் உறியடிக்கும்  போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் ராதா ருக்மணி சமேதர வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவிலில்  சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலையில் வேணுகோபால சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. அந்த வீதியுலாவின் போது கண்ணனின் திருவிளையாடல்களை நினைவுபடுத்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும்  போட்டி  நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற அந்த வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 25 அடி உயரம் உள்ள மரத்தினை ஊன்றி வைத்து மரத்தின் மேலே பிஸ்கட், முறுக்கு, குளிர்பானம் உள்ளிட்ட பல வகையான  தின்பண்டங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

போட்டியில் பங்கேற்ற  இளைஞர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வழுக்கு மரத்தில் ஏறி அதில் மேல் இருந்த தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து கீழே உள்ள இளைஞர்கள் கூட்டத்தில் வீசினர்.

புதுக்கோட்டை
உறியடி போட்டியில் வென்ற இளைஞர்

அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் சாயம் கலக்கப்பட்ட தண்ணீரை எடுத்து ஒருவருக்கொருவர் மீது  ஊற்றிக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து உறியடி நடைபெற்றது.

உறியடி அடிப்பவரை அடிக்க விடாமல் அவர் மீது சாயம் கலக்கப்பட்ட தண்ணீரை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஊற்றினர். இதனையும் பொருட்படுத்தாமல் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட உறியை உடைத்தனர். இதனை எடுத்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top