Close
ஜூலை 7, 2024 10:44 காலை

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்

புதுக்கோட்டை

திருமயம் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஏகாதசி விழாவில் பரமபதவாசலைக் கடந்துவரும்அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள்.

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு  விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ள இத்தலம் திருமெய்யம் எனும் பெயர் மருவி திருமயம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் எனவும் சமஸ்கிருதத்தில் சத்தியஷேத்திரம் என பொருள்படுகிறது.

கிபி 8, 9 -ம் நூற்றாண்டில் இங்குள்ள கோட்டையினுள் குடவரையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டது. இந்த குடவரையில் மேற்கில் சிவனும், கிழக்கில் விஷ்ணுவுக்கும் அருகருகே கோயில்கள் அமைந்துள்ளது வேறெங்குமில்லாத சிறப்பாகும்.
விஷ்ணு பெருமான் சத்தியமூர்த்தி என அழைக்கப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற 108 தலங்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு. அதனாலேயே வைணவ பிரிவினரின் முக்கிய தலமாக திகழ்கிறது. மேலும் திருவரங்கம் வைணவக் கோயிலைவிட காலத்தால் முந்தியதால் இது ஆதிரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. குகைக் கோயிலினுள் விஷ்ணு பெருமாள் ஆனந்த சயனமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

புதுக்கோட்டை
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள்

இத்தகைய சிறப்பும், புகழும் பெற்ற இக்கோயிலில் மார்கழி மாத ஏகாதசி நாளான சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருமங்கை ஆழ்வார் எதிர்சேவையுடன் விஷ்ணு பெருமான் வெண்பட்டாடை உடுத்தி பரமபதவாசலைக் கடந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். பரமபத வாசல் திறந்தபோது கோவிந்தா, கோவிந்தா எனும் பக்தர்களின் முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலித்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை திருச்சாற்று முறை ஆழ்வாருக்கு மோட்சமளித்து மோகனாவதாரத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து அதிகாலை திருப்பள்ளி எழுச்சிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து அனந்த சயன அலங்காரத்துடன் விஸ்வரூப தரிசனமும், ராஜ அலங்கார சேவையும் நடைபெற்றது.

புதுக்கோட்டை
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, திருமயம் வட்டாட்சியர் புவியரசன் , ஊராட்சித் தலைவர் எம்.சிக்கந்தர், உபயதாரர்கள் மதுரை டி.எஸ். ஶ்ரீதர் அய்யங்கார், வர்த்தகர் கழக தலைவர் கே. கருப்பையா, இளஞ்சாவூர் கே.எல். அழகப்பன், திருமயம் ராமானுஜ அய்யங்கார், சுவாமிநாதன்,, க.தெ.க. உருக்கால், மேலூர் சா.அ. குடும்பத்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா, செயல் அலுவலர் ச.முத்துராமன், ஆலய மேற்பார்வையாளர் ரா.சுப்பிரமணியன், திருமயம் தொல்லியல்துறை உதவி பராமரிப்பாளர் பா. விக்னேஷ்வரன் குழுவினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில் திருமயம் ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் கே. ராஜு உள்பட 50 க்கும் மேற்பட்ட போலீஸார் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top