திருமயம் அருகே கொசப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென் சபரி ஐயப்பன் கோவிலில் படி பூஜை நடைபெற்றது.
ஐயப்பன் கோவிலில் செய்யப்படும் படி பூஜை மகரஜோதி உள்ளிட்டவைகளுக்கு இணையாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கொசப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தென் சபரி ஐயப்பன் கோவிலில் படிபூஜை விமரிசையாக நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். படி பூஜைக்கு முன்னதாக காலையில் மண்டல பூஜை நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை படி பூஜை நடைபெற்றது. படி பூஜை நடைபெறுவதை யொட்டி 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சபரிமலையில் செய்யப்படுவது போல நடத்தப்பட்ட படிபூஜை 18 படிகளை பூக்களாலும், விளக்குகளாலும் அலங்க ரித்து அவற்றுக்கு கீழே 18 -ஆம் படி ஏறும் இடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்யப்பட்டது. ஒவ்வொரு படியிலும் படி பூஜையும், மூர்த்தி பூஜையும் நடத்தப்பட்டது.பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடியில் நெய் விளக்கு ஏற்றி தீபம் காண்பிக்கப்பட்டது. 18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நைவேத்தியம் நடைபெற்ற பிறகு பிரசன்ன பூஜை நடைபெற்றது.பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதற்கு பிறகு பிரதான தந்திரியும், மேல்சாந்தியும் மற்றும் சில குறிப்பிட்ட பக்தர்களும், படியேறி சென்றனர். பிறகு சந்நிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் இந்த படி பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.