புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் அந்தோணியார் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களால், `புனித அந்தோணியார்’ என்று போற்றப்படுபவர், போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். அவர் கிறிஸ்தவத்தின்மேல் கொண்ட பற்றும் பைபிளை அணுகும் கூர்மையும், அவரின் புனித வாழ்வு என்றும் கிறிஸ்தவர்களால் நினைவு கூரப்படுகிறது. 15 வயதில் துறவறம் பூண்ட அவர், இறந்த தினமான ஜூன் 13- ஆம் தேதி, உலகம் முழுவதும் புனித அந்தோணியார் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இத்திருவிழா பொங்கல் பண்டிகைக்கு மூன்றாம் நாள் அந்தோணியார் பொங்கல் விழாவாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வனத்து அந்தோணியாரின் நினைவு நாளையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சார்பாக அந்தோணியாருக்கு பொங்கலிட்டு இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் திருமயம் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் அந்தோணியாருக்கு புதன்கிழமை பொங்கலிட்டு கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பங்கு ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில், பங்குத்தந்தை ஜி. ஜேம்ஸ் அடிகளார் பங்கேற்று திருப்பலி செய்தார். இதில் தண்ணீர், அரிசி, வெல்லம், கரும்பு, தேங்காய் இவற்றை கொண்டு படைக்கப்பட்ட பொங்கலை திருப்பலியில் காணிக்கையாக செலுத்தி இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தப்பட்டது.
விழாவின் நிறைவாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் பங்கு மக்கள் அனைவரும் பங்குத் தந்தையிடம் ஆசி பெற்று சென்றனர்.
இதில், கத்தோலிக்க கிறிஸ்தவ சங்கத்தலைவர் இருதயராஜ், செயலர் யுவராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ஜான்பீட்டர், ஆசிரியர் ஞானம் மற்றும் கிறிஸ்தவர்கள், ஊர் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, பானை உடைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.