Close
நவம்பர் 24, 2024 10:09 மணி

கேரளாவில் ஆயிரம் ஆண்டு பழமையான புத்தன் சபரிமலை..

தேனி ராஜ்

கேரளாவில் உள்ள புத்தன் சபரிமலை

கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான மற்றொரு ஐயப்பன்கோயில் உள்ளது.

சபரிமலை போன்ற அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கிய ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோயில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை ஐயப்பன் ஆலயம்.

இந்த புத்தன் சபரிமலை ஐயப்பன் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது. காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை. சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன ஐயப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோயிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலை யில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனா பிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் ஐயப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலை யை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள்.

தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலை யில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற் றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர் களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top