திருமயம் கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிக்கிழமை வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடக்கு திசை பார்த்து தனி சந்நிதியில் அமைந்திருக்கும் விசாக நட்சத்திரம் பைரவரான கோட்டை காலபைரவர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இங்கு மாதம்தோறும் தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி நாள் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை(3.2.2024) இந்த ஆண்டின் 2 ஆவது தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு மதியம் பக்தர்கள் காலபைரவர் கோயிலில் வழிபாடு செய்யத்தொடங்கினர். இதில், கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உள்பட பல்வேறு பூஜை பொருள்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சந்தனம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காலபைரவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருமயம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் காலபைரவருக்கு நெய் தீபம், மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம் உள்பட பல்வேறு வகையான தீபங்களை ஏற்றி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருமயம் அருகே உள்ள துருவாசபுரம் தெற்கு வாசல் காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.