புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஸ்ரீ லெட்சுமிஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் 2024 அரசு பொது தேர்வு 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் டிஎன்பிஎஸ்சி வங்கி, கல்லூரி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஆலயத்திலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் ,ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கல்வி சங்கல்ப பூஜையில் மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் வைத்து கல்வி சங்கல்ப பூஜை கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அரசு பொதுத் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபை சார்பில் சுமார் 10 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
லெட்சுமி ஹயக்ரீவர் பற்றி கே.மணி குருக்கள் பேசியதாவது: ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மையானவர், சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவரை உபாசிக்கிறேன் என்பது பொருள். கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஹயக்ரீவர் .
ஸ்ரீ ஹயக்ரீவரை விரதமிருந்து மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.
குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும்.. ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குகிறோம்.அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
தலைமை ஆசிரியை லதா, பேராசிரியர்கள் ஆசிரியர்கள் அனிதாராணி , மாலதி, பார்வதி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதும் வழி முறைகளைப் பற்றி விளக்கிப் பேசினார்கள்.
நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் சீனிவாச குருக்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபையினர், ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.