Close
நவம்பர் 24, 2024 7:15 காலை

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி மாசிப் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

சென்னை

மாசி பிரம்மோற்சவ பெருவிழாவினையொட்டி புதன்கிழமை நடைபெற்ற திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி கோயில் திருத்தேரோட்டம்.

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப்பெரு விழாவினையொட்டி திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தின் மிகப் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவஸ்தலங்களில் முதன்மையானதாகும். கலிய நாயனார் பணிபுரிந்து அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற புகழுடையது இக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழாவும் ஒன்றாகும்.

11 நாள்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழா நிகழ்ச்சிகள் கடந்த பிப்.15 -வியாழக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.15 முதல் தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவர் சந்திரசேகரர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி வெள்ளிக்கிழமை சூரிய, சந்திர பிரபை, சனிக்கிழமை – பூத, சிம்ம வாகனம், ஞாயிற்றுக்கிழமை நாக,ரிஷப வாகனம், திங்கள்கிழமை-அதிகார நந்தி, அஸ்தமானகிரி வாகனம், செவ்வாய்க்கிழமை-யானை வாகனம் உள்ளிட்ட வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் புதன்கிழமை  நடைபெற்ற்றது.

காலை சுமார் 10 மணிக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு உள்ளிட்டோருடன் இணைந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. தேரில் உற்சவர் ஸ்ரீ சந்திரசேகரர் உடனுறை ஸ்ரீ திருபுரசுந்தரி அம்மன்  அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரடியில் தொடங்கிய தேரோட்டம் சந்நிதி தெரு,  திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக மதியம் சுமார் 2 மணியளவில் தேர் நிலைக்குத் திரும்பியது.   விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் வரும் பிப்.23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் சார்பில் நாள் முழுவதும் செட்டிநாட்டு சமையலுடன் கூடிய தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  இது தவிர  நூற்றுக்கணக்கான உபயதாரர்கள் பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர் பந்தல்களை அமைத்து பக்தர்கள், பொதுமக்களுக்குச் சேவையாற்றி வருகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் எஸ்.சுப்பிரமணியம் மற்றும் தக்கார் ஆர்.ஹரிகரன் தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதங் களைத் தவிர்க்கவும் காவல் உதவி ஆணையர் இளங்கோவன், ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில்  நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top