Close
நவம்பர் 22, 2024 5:49 காலை

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் வரலாறு அறிவோமா..?

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயம் (கோப்பு படம்)

Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்

திருவட்டாறு திருத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாா். திவ்ய தேசங்களில் பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பான தரிசனமாக வணங்கப்படுகின்றது. இப்பெருமாளின் திருமேனி கல்லால் வடிக்காத திருமேனி.

கேரளாவின் வேணாட்டை ஆண்ட மன்னர் கி.பி.776 – ம் ஆண்டு 16,008 சாளக்கிராம மூா்த்தங்களால் கடு சர்க்கரை யோகம் என்னும் (41 மூலிகைகளின் கலவை) கலவையினால் இணைத்து உருவாக்கப்பட்டு மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருமேனி ஆகும். இதனால் இப்பெருமாளுக்குத் திருமஞ்சனம் கிடையாது.

thiruvattar adikesava perumal sleeping image

இடது திருக்கரத்தைக் கீழே தொங்கவிட்ட நிலையில் வலது திருக்கையில் யோக முத்திரை காட்டி தென்முகமாக தன் சிரசினை வைத்து வடக்கே தன் திருவடிகளை நீட்டி 22 அடி நீளமான அர்ச்சாவதாரத் திருமேனியராக “ஸ்ரீசேஷ சயனத்தில்” சேவை சாதிக்கின்றாா் பெருமாள்.

ஆதிகேசவப்பெருமாள் அளவுக்கு பேரழகு கொண்ட சிலை ஏதுமில்லை! இருளுக்குள் பளபளக்கும் கன்னங்கரிய திருமேனி. நாசியின் கூர்மையும் புன்னகை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத உதடுகளும், குவிந்து மூடிய கண்களும் ஒருபெரிய கனவு போல் நம் கண்முன் விரியக்கூடியவை.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil

திருமாலின் “பஞ்சாயுத புருஷர்கள்” என அழைக்கப்படும் சக்கரம், வாள், வில், கதை, சங்கம் என்ற ஐந்தும், தொடர்ந்து சூரியன் மற்றும் கருடாழ்வார், மது, கைடபா்கள் ஆகியோர் உருவங்களில் காட்சி தருகின்றனர். இடக்கரம் தொங்கும் இடத்தில் ஹாதலேய மகரிஷியும், ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றனர். மற்ற இடங்களில் இருப்பது போல் நாபியில் பிரும்மா இல்லை, பத்மமும் கிடையாது. இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை.

ஒரு யுகம் முடியும் போது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுப்பார் என்று கூறப்படுகிறது!

ஆதிதேவனான எம்பெருமாள் ஆதிகேசவன் என்ற திருநாமத்தோடு அருள்பாலிப்பது அவரது ஆயிரம் திருநாமங்களிலும் உயா்வான திரு நாமமாகும். திருவட்டாறு தலத்தில் அசுரன் கேசியைக் கொன்றதால் எம்பெருமாளுக்கு ஆதிகேசவன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

கண்ணனை வதைக்க கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்ற அரக்கனைக் கொன்றதாலும் ஆதிகேசவன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தன் நண்பனான கேசியை அனுப்பி பலராமனையும் கண்ணனையும் கொல்ல ஆணையிட்டான் கம்சன்.

அசுரன் கேசி, பெரிய குதிரையாக வடிவமெடுத்து அவா்களைக் கொல்ல முயற்சித்தபோது, தனது திருக்கரத்தைப் பெரிதாக்கி கேசியின் வாய்வழியாக வயிற்றுக்குள் நுழைத்து அவனை இரண்டாகப் பிளந்து கொன்றாா் எம்பெருமாள். இதனாலும் யசோதையின் இளஞ்சிங்கத்திற்குக் “கேசவன்” என்ற திருநாமம் ஏற்பட்டது.

thiruvattar temple maha mandapam

Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியாா்

இத்தலத்தின் தாயாா் “ஸ்ரீமரகத வல்லி நாச்சியாா்” என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாா். இத்தலத்தின் தீா்த்தமாக கடல்வாய் தீா்த்தமும், வாட்டாறு ராம தீா்த்தமும் உள்ளது. இந்தக் கோயில் திருச்சுற்றில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணனுக்கும், ஸ்ரீ சாஸ்தாவுக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் ஸ்ரீ வழிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ குல சேகரப்பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.

வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் கடைசியாகத் திருப்பணிகள் செய்யப்பெற்று 1604 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. தற்போது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு 06 ஜூலை 2022 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

சூரிய தரிசனம்

ஆண்டுதோறும் பங்குனி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும் சூரியனின் மாலை நேரக் கதிா்கள் மூலவரின் திருமேனி மீது பட்டு சூரியபூஜை நடைபெறுவதைக் காணலாம்.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
திருவட்டாறு கோவில் அமைப்பு

திருவனந்தபுரம் சந்நிதியைப் போல இத்தலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் சந்நிதியிலும் மூன்று வாசல்கள் உள்ளன. இந்த வாசல்கள் மூலமாக பெருமாளின் திருமுகம், நாபி மற்றும் திருவடிகளைச் சேவிக்கலாம். இருபது படிகள் ஏறிச்சென்று இப்பரந்தாமனைத் தரிசிக்க வேண்டும்.

இந்தக்கோவில் “தந்த்ரா சமச்யம்” என்ற நூல் கூறும் பஞ்சப்பிராகார விதியின் அடிப்படையிலான அர்த்த மண்டபம், நாலம்பலம், விளக்கு மாடம், ஸ்ரீ பலிபுரா, புறமதில் என ஐந்து நிலைகளில் அமைந்து தமிழக/கேரள கோவில்கள் அமைப்பைக் கொண்டது. தாந்திரீக முறை பூஜைகள் நடைமுறையில் உள்ளன.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil

சுற்றுப்பிராகாரத்தில் 224 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் கேரளத்துப் பாணியில் பாவை விளக்கேந்திய மங்கை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது கலையம்சத்துடன் காணப்படுகின்றது. இத்தலத்திற்கு “ஸ்ரீஆதிஅனந்தபுரம்” மற்றும் “சேரநாட்டுத் திருவரங்கம்” என்றும் திருநாமங்களும் உள்ளன.

எம்பெருமாளது கருவறையின் மீதுள்ள செம்பிலான “அஷ்டாங்க விமானத்தில்” பொன் முலாம் பூசப்பட்ட 5 தங்க கலசங்கள் உள்ளன. தாரு மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் கருவறையில் காணப்படுகின்றன.

ஒற்றைக்கல் மண்டபம்

மூலவரின் சந்நிதிக்கு முன்புறம் 18 அடி சதுரமும் 3 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஒற்றைக் கல்மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) உள்ளது. அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறை, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும்.

மேலும் ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், மன்மதர் மற்றும் ரதி தம்பதியர், லக்ஷ்மணர் மற்றும் இந்த்ரஜித் போன்றவர்களின் சிலைகள் மிகவும் அற்புதமாக அழகுடன் செதுக்கப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாகும். கோவிலை சூழ்ந்து சுவரில் வரையப்பட்டிருக்கும் வண்ண வண்ண சித்திரங்களுக்கும் இந்தக்கோவில் பெயர் பெற்றதாகும்.

கி.பி. 1604 ஆம் ஆண்டு இம்மண்டபம் அமைய வீர ரவிமர்மன் என்ற குலசேகரப் பெருமாள் பொருளுதவி செய்தான். 12 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபம் இந்தியாவிலேயே பெரிய ஒற்றைக்கல் மண்டபமாகும். பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது மரபு.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
மருள் ஒழிக்கும் கடுசர்க்கரை யோகம்

கடு சர்க்கரை யோக முறையைப் பற்றிய சிறு குறிப்பு

போகர் சித்தர் நவ பாஷாண முறையில் பழனி முருகன் சிலையை வடித்ததுபோல் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் நெடிதுயர்ந்த சிலையும் கடு சர்க்கரை யோகம் என்ற முறையில் வடிக்கப்பட்டுள்ளது.

108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலம் திருவட்டாறுதான். அத்துடன் இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில் எங்கும் இல்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் கடுசர்க்கரை என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி 18 அடி நீளமுள்ள கடுசர்க்கரை யோகம். கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிசேகம் கிடையாது.

ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் அரிய தகவல்களைத் தொகுத்து, ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் திருவட்டாறு கோவில் வரலாறு’ என்னும் புத்தகத்தை எழுதியவரும், வரலாற்று ஆய்வாளருமான அ.கா.பெருமாள் இந்த ஆலயத்தைக் குறித்தும், அதன் பின்னால் இருக்கும் புராணப் பின்னணி குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“வைணவத்தில் 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அதில் சோழநாட்டில் ஸ்ரீரங்கம் உள்பட 40 கோயில்களும், தொண்டை நாட்டில் 22 கோவில்களும், வடநாட்டுத் திருப்பதியாக 11 கோயில்களும், பாண்டியநாட்டுத் திருப்பதியாக 18 கோயில்களும் வருகின்றன. அந்த வரிசையில் மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் 12-வது கோயிலலாக இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்கோயில்.

திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
1604-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகம் குறித்து, கோயில் வளாகத்திலேயே கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது” என்றவர் ஆலயத்தின் தலவரலாறு பற்றியத் தகவல்களை பேசத் தொடங்கினார்:

“மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் நமக்குத் தெரியும். அவைகள் மட்டுமே இல்லாமல் கூடுதலாக சில வடிவங்கள் எடுத்தார் மகா விஷ்ணு. குமரி மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால் பறக்கை கிராமத்தில் நின்ற கோலத்திலும், திருப்பதி சாரத்தில் அமர்ந்த கோலத்திலும், திருவட்டாரில் சயனநிலையிலும் விஷ்ணு அருள்பாலிக்கிறார்.

பறக்கையில் மதுவாகிய அரக்கனை வென்றதால் மதுசூதனப் பெருமாள் என அருள்பாலிக்கிறார். அதேபோல்தான் திருவட்டாறில் கேசன் என்னும் அரக்கனையும், அவரது சகோதரியான கேசி என்னும் அரக்கியையும் வீழ்த்தினார். அதனால் தான் ஆதிகேசவப்பெருமாள் எனப் பெயர் வந்தது. கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான்.

அவனது சகோதரி கேசியோ இந்திரனின் அழகில் மயங்கி தன்னை மணக்கும்படிக் கேட்டாள். இந்திரன் மறுத்ததால் சினம்கொண்ட கேசி, தன் அண்ணன் கேசனிடம் இந்திரன் தன்னை பலவந்தமாக புணர முயன்றதாய் பொய் புகார் சொன்னாள். ஆனால் அதை உண்மை என நினைத்துக்கொண்ட கேசன், போரிட்டு இந்திரனை வீழ்த்தினான். போரில் தோல்வியுற்ற இந்திரன் ஓடி ஒளிந்துகொண்டார். கேசன் பிரம்மனிடம் சாகாவரம் வாங்கியவன், இந்திரனால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. இதனால் தன்னை இன்னும், உயர்வாக நினைத்துக்கொண்ட கேசன் தேவர்களையும், சூரிய, சந்திரர்களையும் அவமானம் செய்தான்.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
இதை அறிந்த விஷ்ணு, கருடரின் மேல் ஏறி கேசனுடன் போரிட்டார். ஆனால் அவனை வீழ்த்த முடியவில்லை. அப்போதுதான் பராசக்தி, “கேசன் மரணமற்றவன். அவனைக் கொல்லமுடியாது. ஆதிசேஷன் (பாம்பு) கேசனைச் சுற்றி அணை கட்டட்டும். நீ அதன் மேல் சயனிப்பாய்!” என்று சொல்லியிருக்கிறார். அதன்படி தான் நாகப்பாம்பின் மேல் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் சயனநிலையில் படுத்திருக்கிறார்.

கேசியின் மீது ஆதிகேசவ பெருமாள் சயனித்தபோது அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சத்தை வைத்து அவனைத் தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாறைச் சுற்றி 12 சிவாலயங்களாக அமைந்தன. மகா சிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

சிவாலய ஓட்டம்

மகாசிவராத்திரியை ஒட்டி இந்த 12 ஆலயங்களையும் ஒரே நாளில் ஓடியே சென்று தரிசனம் செய்யும் சடங்கு கடந்த 200 ஆண்டுகளாக குமரிமாவட்டத்தில் நடந்து வருகிறது. அதற்கு சிவாலய ஓட்டம் என்று பெயர்.

சிவாலய ஓடும் ஆலயங்கள் கீழ்க்கணடவை:

திருமலை[ முஞ்சிறை]
திக்குறிச்சி
திற்பரப்பு
திருநந்திக்கரை
பொன்மனை
பந்நிப்பாகம்
கல்குளம்[பத்மநாபபுரம்]
மேலாங்கோடு[குமாரகோவில்]
திருவிடைக்கோடு[வில்லுகுறி]
திருவிதாங்கோடு
திருப்பன்றிக்கோடு
திருநட்டாலம்
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
பாம்புப் படுக்கையில் கீழே கேசன் என்னும் அரக்கன் இருப்பதாக ஐதீகம். கேசன் வெளியே வந்துவிடாதபடிக்குத்தான் பாம்பும், மூன்று சுற்றுகளாகச் சுற்றி உயரமாக இருக்கும்.

தன் அண்ணன் கேசன் பாம்பு படுக்கையின் கீழே அடைபட்டுக் கிடப்பதை அறிந்த கேசியால் அதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. கங்கையை நோக்கி வணங்கினாள். கங்கை இருகிளைகளாகப் பிரிந்து ஆதிகேசவனை அழிக்க வந்தன. இதைப்பார்த்த பூதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருளிச் செய்தார். இதனால் இரு நதிகளாலும் பெருமாளை ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த கேசியால் கொண்டுவரப்பட்ட இரு பிரிவு நதிகளே இன்றும் குமரியில் ஓடிக்கொண்டிருக்கும் கோதையாறாகவும், பறளியாறாகவும் ஆகியது என்பது ஐதீகம்.

இதை வெறுமனே புராணக்கதை எனக் கடந்து போய்விட முடியாது. இன்றும் திருவட்டாறில் இந்த ஆலயம் மட்டும் தரைமட்டத்தில் இருந்து 16 அடி உயரத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இங்கு பாறைகள் இல்லை. இதன் கட்டுமானப் பணிகளின்போதே கல்லையும், மண்ணையும் கொண்டுவந்து குவித்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. இப்போதும் திருவட்டாறைச் சுற்றி ஆறாகத்தான் ஓடுகிறது.

அந்த ஊருக்குள் ஒரு சுற்று, சுற்றி வந்தாலே இதைப் பார்க்கமுடியும். இந்த இடத்தில்தான் கேசியின் வேண்டுதலால் தண்ணீர் வந்ததையும், மகா விஷ்ணு இருக்கும் இடம் உயர்ந்ததையும் பொருத்திப் பார்க்கிறேன்.” என்று அவர் சொல்ல, சொல்ல ஆச்சர்யம் மேல் எழுகிறது.

பதினொன்றாம் நூற்றாண்டிலேயே இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது அ.கா.பெருமாளின் கணிப்பு. அதைப்பற்றியும் தொடர்ந்து பேசியவர், “சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் கோயில் சுற்றுச்சுவர் விளக்கு தீப்பிடித்து எரிந்ததால் கலசபூஜை செய்திருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் கோயிலில் ஒரு திருட்டு நடந்திருக்கிறது. அதனால் தீட்டு கழிப்பு பூஜையும் நடந்தது. இருந்தும் இந்த ஆலய கும்பாபிசேகம் மிகவும் அரிதிலும், அரிய நிகழ்வு.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
திருவட்டாறு கோயிலின் சிறப்பம்சங்கள்

1) திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தினரின் குல தெய்வமாக விளங்கிய கோயில்

2) திருச்சி ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்களுக்கு முந்தைய கோயில் .

3) 108 திவ்ய தேசங்களில் 76-வது கோயில். 108 திவ்ய தேசக் கோயில்களில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சிதரும் ஒரே திருத்தலம்.

4) ஆதியில் ஆதிதாமபுரம் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்பட்டது.

5) திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950-ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது.

6) பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோவில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாராம்.

7) 1106-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

8) திருவட்டாறு கோயிலின் மேற்கு வாசல், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு வாசல், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் கிழக்கு வாசல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

9) சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள்.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
10) திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆதி கேசவ பெருமாளுக்கு பூசனைகள் செய்வோர் வரலாறு

முற்காலத்தில் நம்பூதிரிகளால் பூசை செய்யப்பட்ட இவ்வாலயம் மார்த்தாண்டவர்மா மகாராஜாவுக்குப் பின்னர் துளு பிராமணர்களால் பூசை செய்யப்படுகிறது. தலைமை பூசாரி நம்பி எனப்படுகிறார். அவர் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார்.

பதவிக்காலத்தில் அவர் பூசையல்லாத நேரத்தில் தனிமையில் துறவு வாழ்க்கை வாழ வேண்டும். இங்குள்ள சிறப்பு தாந்த்ரீக பூஜைகளைச் செய்பவர்கள் தந்த்ரிகள் எனப்படுகிறார்கள். மணலிக்கரை போத்தி, அத்தியறைப்போத்தி என்ற இரு துளுபிராமண இல்லங்கள் தந்திரிகளாக உள்ளனர். இவர்கள் பிராமணர்கள் அல்லர். இது மட்டுமின்றி, இக்கோவிலில் பிராமணர்கள் பூசை செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
கோயில் தரிசன நேரம்:

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும். நண்பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கபட்டு, இரவு 8 மணிக்கு அடைக்கப்படும்.

தினமும் ஐந்துகால பூஜை நடக்கிறது. அதன்படி அதிகாலை நிர்மால்ய பூஜை. அதன்பிறகு சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யப்படும். அடுத்து உஷ பூஜை, தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேகம், மூலவருக்கு பஞ்ச கவ்யம் சாத்தப்படும். தினமும் காலை 7.45 மணிக்கும், மாலையில் 6.30 மணிக்கும் இருவேளை ஆரத்தி நடக்கிறது.

திருவட்டாறுக்கு எப்படி செல்வது?

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் மாா்த்தாண்டத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருவட்டாறு. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பொடிநடை போடும் தூரத்திலேயே கோவில் வந்துவிடும். நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் என கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோயில் செல்லும் சாலையில் “தொடுவெட்டி” என்ற ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் திருவட்டாறு திருத்தலம் உள்ளது.

இதேபோல் காரில் செல்பவர்கள் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அழகிய மண்டபம் சந்திப்பில் இருந்து வேர்கிளம்பி வழியாகச் செல்லலாம்.
Thiruvattar Adikesava Perumal Temple History in Tamil
ஆதி கேசவ பெருமாள் கோயில் தொடர்பு எண் : +91-94425 77047

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் முகவரி :

கோயில் சாலை கல்குளம், குலசேகரம் வட்டம், திருவட்டாறு, தமிழ் நாடு -629171

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top