Close
செப்டம்பர் 19, 2024 7:05 மணி

முருகன் நினைத்தால் மட்டுமே நாம் செல்ல முடியும் கோயில் எது தெரியுமா?

தமிழ்நாடு

முருகன் நினைத்தால் மட்டுமே

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இந்தக் கோயிலில் உள்ள முருகன் சிலையானது சித்தர் போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் இரண்டு கோயில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான முருகன் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பழநி மலை மீது உள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, மற்றொன்று பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

பழநி மலை நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷாணத்தால் உருவாக்கியவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுபோல், அருள்பாலிப்பதிலும் பழநி முருகனைப் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்தக் கோயிலுக்குச் சென்று வந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பழநி மலைக்கும் பூம்பாறைக்கும் நடுவில் உள்ள யானைமுட்டி குகையில் சித்தர் போகர் அமர்ந்துதான் தாம் கற்ற கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ரசாயனப் பொருட்களை சேகரித்து முதலில் முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத்தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கி யதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர்.

பின்னர் சித்தர் போகர் மறுபடியும் சீன நாட்டிற்குச் சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானைமுட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தி யின் துணைகொண்டு குரு மூப்பு என்ற அருமருந்தை நிலை நிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார். அந்த சிலைதான் பூம்பாறை மலை உச்சியில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

கருவறையில் குழந்தை வடிவில் கையில் வேலுடன் முருகப்பெருமான் திகழ்வதால் குழந்தை வேலப்பர் என திருநாமம் ஏற்பட்டது. பழனி யாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள் குழந்தை வேலப்பரை தரிசித்து விட்டு மிட்டாய்களை நெய்வேத்தியம் செய்த பின்னரே பழநிக்குச் செல்கின்றனர்.

இந்த மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலை போலவும் தெற்கில் இருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும் வடக்கில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்று தெரியும். இம்மலையைச் சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள், செடிகள் நிறைந்துள்ளன. இந்தக் கோயிலில் நுழைவாயிலில் சித்தி விநாயகர் சர்ப்பத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். உட்பிராகாரத்தில் காலபைரவரும் தட்சிணாமூர்த்தியும் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்

ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரம் ஆனதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவி உடை அணிந்தி ருந்த அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரை கொல்லாமல் சென்று விட்டதாம். இதனை தனது ஞான திருஷ்டியால் அறிந்த அருணகிரிநாதர் குழந்தை வேடத்தில் வந்து தனது உயிரைக் காப்பாற்றியதும் முருகனே என்று உணர்ந்தார். அன்று முதல் இத்தலத்து முருகன் குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்தக் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு இங்குள்ள கிரந்த எழுத்துக்களும் பழங்கால சிலை அழகும் சான்றாக உள்ளன. சங்க காலத்தில் இந்த மலையின் பெயர் கோடை மலை. இத்தல முருகர் விழா காலத்தில் தேரில் வீதி உலாவின்போது மலையில் இருந்து தேர் இறங்கும்போது பின்பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் மலை மீது ஏறும்போது முன்பக்கம் கயிற்றால் கட்டி இழுத்தும் இரண்டு பக்கமும் இயக்கப்படுகிறது. இந்தத் தலத்தின் மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால் குழந்தை வேலப்பர் வடிவில் அருளும் முருகப்பெருமான் மனது வைத்து அழைத்தால் மட்டுமே யார் ஒருவராலும் இத்தல முருகப்பெருமானை தரிசிக்க முடியும் என்பதுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top