‘‘கோ’’ என்றால் இறைவன். ‘‘புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள்.
“கோபுர தரிசனம் பாப விமோசனம்” என்பது பழமொழி… கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். அப்படி ஒவ்வொரு ஊருக்கும் அழகு தருவது கோயில் ஆகும். கோயிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும்.
கோயில் வாசலில் அமைக்கப்படும் ராஜகோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும். இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்று சொல்வது ஐதீகம். கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படும்.
கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு.
“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி………..”
கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
“கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா கால்களாற் பயனென்” என அப்பர் சுவாமிகள் கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்”
என்று கோபுர பெருமையை சொல்கிறார் திருமூலர்…
கோபுர அமைப்பு:-
கோபுரம் என்பது சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்து நிற்கின்றன. கோபுரத்தில் தேவகணங்கள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக் காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும்.
நமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக்கோபுர அமைப்புக்கு ஒத்ததாக அவ்வமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். நமது சக்திக்கு மேற்பட்டவர் இறைவன் என்பதையும், அவரை அடைவதற்கு நமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கோயிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.