மகரிஷி வேதவியாசர் மகாபாரத்தின் கடைசி ஸ்லோகத்தைச் சொல்லி முடித்தார். அதை விக்னேஸ்வரர் ஓலைச்சுவடியில் தன் முத்துப் போன்ற அழகிய கையெழுத்தில் எழுதியும் ஆயிற்று. அப்போது வியாசர் சொன்னார்:
விக்னேஸ்வரா! தங்கள் எழுத்தாணி பெறும்பேறு பெற்றது. ஏனெனில் உண்மையில் மகாபாரதத்தை நீங்கள்தான் சிருஷ்டித்தீர்கள். ஆனால், உங்கள் எழுத்தாணியை விட வியப்பளிக்கும் விஷயம், தங்களுடைய இந்த நீண்ட மௌனம். நீங்களும் நானும் நீண்டகாலமாக உடன் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் நான் 15-20 லட்சம் சொற்கள் சொல்லியிருக்கிறேன். ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூடக் வெளிப்படவில்லை. இது ஏன்?
விநாயகர் தன் மௌனத்தை விளக்கிச் சொன்னார்:
பாதராயணரே! சில விளக்குகளில் அதிக அளவில் எண்ணெய் இருக்கும். சிலவற்றில் குறைவு. ஆனால், எந்த விளக்கிலும் தீர்ந்தே போகாத அளவு எண்ணெய் இருப்பது சாத்தியமில்லை. அதேபோல தேவர்கள், தானவர்கள், போன்ற எல்லோருடைய பிராண சக்தியும் எல்லைக்குட்பட்டது. சிலருக்கு அதிகம், இன்னும் சிலருக்குக் குறைவு. எல்லையில்லாத சக்தி யாருக்கும் கிடையாது.
இந்தச் சக்தியின் முழுப்பயனையும் அடைய வேண்டுமானால், கட்டுப்பாட்டுடன் இதை உபயோகிக்க வேண்டும். கட்டுப்பாடு தான் எல்லா சித்திகளுக்கும் ஆதாரம். கட்டுப்பாட்டின் முதல் படி நாக்கைக் கட்டுப்படுத்துதல் அல்லது மௌனம். யார் நாவை அடக்குவதில்லையோ, அவர் வாய் அனாவசியமாக வார்த்தைகளைச் செலவழிக்கிறது. அவசியமற்றுப் பேசிக்கொண்டே போவதால், மனக்கட்டுப்பாடும் அற்றுப் போய் சக்தி விரயமாகிவிடுகிறது. விநாயகர் சொன்ன இந்த விளக்கம் நம் எல்லோருக்கும் பொருந்தும் அல்லவா?