Close
ஏப்ரல் 2, 2025 9:42 மணி

பங்குனி கிருத்திகை : வல்லக்கோட்டை முருகன் கோயிலில் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்..!

காத்திருந்த பக்தர் கூட்டம்

பங்குனி கிருத்திகையினை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.

பழமையான இத்திருக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். இங்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், இழந்த பதவி, நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதால் நாளுக்குநாள் பக்தர் வருகை அதிகரித்து வருகிறது.

பகீரதன் எனும் அரசன் வந்து சுக்கிர வாரத்தில் முருகப் பெருமானை வழிபட்டு இழந்த இராஜ்ஜியத்தை பெற்றான். அதனால் இங்கு வெள்ளிக் கிழமை 6 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு இழந்த செல்வங்கள், பதவிகள், சொந்த வீடு மனை ஆகியன கிடைக்கும்.

தேவகுருவின் வழிகாட்டுதல்படி இந்திரன் மங்கல வாரத்தில் இத்தலத்திற்கு வந்து முருகப் பெருமானைப் பூசித்து இந்திராணியை மணந்தான். இது கல்யாண பிரார்த்தனை தலமாகவும் உள்ளது. அதனால் 6 செவ்வாய்க்கிழமைகள் இத்திருக்கோயிலுக்கு வந்து மாலைகள் சாற்றி முருகப்பெருமானைப் பூஜிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் பங்குனி கிருத்திகையும் செவ்வாய்கிழமையும் ஒன்றாக வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மூலவர் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவர் கோடையாண்டவருக்கும் அதிகாலை 5 மணிக்கு 18 குடங்களில் பால் அபிஷேகமும் நடைபெற்றது. காலை 6மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்திலும் படிமாலை அலங்காரத்திலும் உற்சவர் கோடையாண்டவர் வீராசன மலர் அலங்கார சேவையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கோயிலில் குவிந்தனர். அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு 2 மணி நேரம் வரிசையில் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், மோர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், க.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top