Close
நவம்பர் 21, 2024 1:58 மணி

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

திருவாரூர் தேர்

திருவாரூரில் நடைபெற்ற ஆழித்தேரோட்டம்

உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். சைவ தலங்களில் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். சைவ மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சொந்தமான தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர். ஆசியாவிலேயே மிகவும் பழமையான இந்த தேர் கடல் போன்ற மக்கள் வெள்ளத்திற்கு இடையில் ஆடி அசைந்து வருவதால் ஆழித்தேர் என சமயக் குறவர்களால் அழைக்கப்படுகிறது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற இந்த திருத்தேர் சிதிலமடைந்து ஓடாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் வழிகாட்டுதல்படி ரூ. 86 லட்சம் செலவில் தேர் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை ஆழித்தேர் திருத்தே ரோட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

அதனை தொடர்ந்து பச்சைக்கொடி காட்டியவுடன்  விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவாரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன், மாவட்ட கலெக்டர் ப. காயத்ரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், மடாதிபதிகள் திருவாரூர் ஆதீனம், தருமபுரம் ஆதீனம், வெள்ளக்குறிச்சி ஆதீனம் மற்றும் திரளான பக்தர்களும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top