சேலம் அருகே உலகில் உயரமான 146 அடி கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் உள்ளது. அங்கு 140 அடி உயரத்தில் பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும். இந்த நிலையில், சேலம்-உளுந்தூர் பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலை நிறுவப்பட்டு இன்று(6.3.2022) குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்தனர். சுமார் ஐந்து ஆண்டாகக் தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்கள் சிலையை வடிவமைக்கும் பணியைச் செய்து வந்தனர்.
தற்போது முழு உருவமும் அமைக்கப்பட்டு முழுமையாக வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்தது. சிலையின் அருகே தற்போது ஒரு லிப்ட் அமைக்கப்பட்டது. இந்த லிப்ட் மூலம் பக்தர்கள் மேலே சென்று முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முருகன் சிலைக்கு இன்று காலை, 10:30 மணிக்கு, 146 அடி உயர முத்துமலை முருகன் சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. உலகின் உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.