Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

அக்னிநட்சத்திரம்.. மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது…

தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் கத்தரி வெயில் மே.4-ல் தொடக்கம்

அக்னிநட்சத்திரம்..மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது.

வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமான காரணங்கள் கணிக்கப்பட்டுள்ளன. பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூ ற்றி சுவேதகி என்ற மன்னன் யாகம் செய்தான். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார் பிரம்மா.  எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அந்த வனம், இந்திரனுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது. அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலை யைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

ராஜ தந்திரியான கிருஷ்ணர், அர்ஜுனனை அர்த்தத்தோடு பார்த்தார். உடனே குறிப்பறிந்த அர்ஜுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். அதைத் தொடர்ந்து கிருஷ்ணர், காண்டவ வனத்தைப் புசிக் கும்படி அக்னி பகவானிடம் கூறினார்.

வழக்கம் போல இந்திரன் மழையைப் பொழியச் செய்ய, ஒரு துளி மழை நீரும் உள்ளே விழாதபடி செய்தான் அர்ஜுனன். செய்வதறியாமல் தவித்த இந்திரன், பூமிக்கு வந்து கண்ண பிரானிடம் முறையிட்டார்.  கண்ணா! அக்னி பகவான் வனம் முழுவதையும் எரித்தால், இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன? ஒருவேளை இந்த வனத்தைப் புசித்தும் அவரது பசி அடங்காவிட்டால் என்ன ஆகும்? வேறு காடுகளைத் தேடிப் புசிக்க ஆரம்பித்து விடுவாரே? அப்படியானால் என் நிலை என்ன? என்று வேண்டினார்.

அனைத்தையும் கேட்ட பரந்தாமன், அக்னி பகவானுக்கு ஒரு கட்டளை இட்டார். அக்னியே! எண்ணி இருபத்தோரு நாட்கள் மட்டுமே நீ காண்டவ வனத்தைப் புசிக்கலாம். அதன்பிறகு உன் வயிற்றுவலியும் தீர்ந்து விடும். அதன் பின்னர், அர்ஜுன னின் சரக்கூடம் கலைந்துவிடும். பூமியைக் குளிர்விக்க இந்திரன் வருவான். அப்போது நீ இடைஞ்சல் செய்யக்கூடாது! என்றார்.

அப்படியே செய்வதாக அக்னியும் வாக்களித்தார். அக்னி பகவான் தனது ஏழு நாக்குகளால் முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில் இருந்த வேர்களையும் பூச்சிகளையும் புசித்தார். அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மரங்கள், செடிகள் ஆகியவற்றை உண்டார். கடைசி ஏழு நாட்கள் அங்கிருந்த பாறைகளை விழுங்கினார் என்கின்றன புராணங்கள்.

காண்டவ வனத்தை அக்னி புசித்த அந்த இருபத்தொரு நாட்கள்தான் அக்னி நட்சத்திர காலம். பின்னாட்களில் இந்தக் கணக்கில் முன்கத்திரி, பின் கத்திரி என்று சில நாட்களை சேர்த்துக் கூறுவது எப்படியோ வழக்கமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் வெப்பம் சற்றே குறைவாகவும், அடுத்த ஏழு நாட்கள் மிக மிக அதிகமாகவும், கடைசி ஏழு நாட்கள் மீண்டும் மிதமாகவும் இருக்கும்.

அதே போல அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பு இந்திரன் பூமியைக் குளிர்விக்க மழையை பொழிவிப்பான் என்றும் சொல்கிறார்கள். கோடை மழை பெய்வது அதனால்தான்.

பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்ம னையும், கிருத்திகைக்கு உரிய தேவதை அக்னியை யும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து (தண்ணீர் பந்தல், நீர்மோர், செருப்பு, விசிறி தானம் போன்றவை) கத்திரி வெயிலில் இருந்து பாதுகாப்பு பெறுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top