Close
நவம்பர் 22, 2024 1:22 காலை

உலகமெங்கும் கொண்டாடித்தீர்த்த அர்ஜன்டைனாவின் வெற்றி..

அர்ஜென்டைனா

கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டைனா

உலகக்கோப்பை கால்பந்து – இறுதி ஆட்டம் நிறைவுற்ற நிலையில்.., அர்ஜன்டைனாவின் வெற்றி, உலகம் முழுவதும் அந்த அணியின் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்படுகிறது.

உலக கால்பந்தில் போட்டியிடாத இந்தியா, இந்த கொண்டாட் டத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டது, அதுவும் இறுதி போட்டி நடை பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே அர்ஜன்டைனா அணிக்கு தங்கள் ஆதரவை உருவ அட்டைகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அடித்து அலப்பறை செய்துவிட்டார்கள்.

ரசிகர்கள் தங்கள் வாகனங்கள், சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளுக்கு கூட வெள்ளை-நீலம் கலவையுடன் வண்ணம் தீட்டும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. தமிழக, கேரள, கர்நாடகா, மேற்கு வங்காள மாநிலத்தின் பல பகுதிகள் முழுவதும் நிரம்பி வழியும் விளம்பரங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் கூட இந்த அளவுக்கு பிரதிபலிக்கவில்லை.

இந்தியாவில் அர்ஜென்டைனா மற்றும் பிரேசில் அணிகள் மீதான ஈர்ப்பின் வரலாறு லியோனல் மெஸ்ஸி பிறப்பதற்கு முன்பே தொடங்குகிறது. இந்திய கால்பந்து ரசிகர்களின் நகர்வுகள் அவர்களின் இதயத்தில் இருந்து நேராக வெளிப்பட்டது போல் தோன்றியது.

இதே உலகக் கோப்பையின் போது தான் புதிய நட்சத்திரம் பிறந்ததை ரசிகர்கள் கண்டனர். பீலேவின் வாரிசாக மீடியாக்களால் போற்றப்படும் டியாகோ மரடோனா, உலகெங்கிலும் உள்ள கால்பந்து பிரியர்களின் இதயங்களை வென்று கொண்டிருந்த தருணம் அது.

1986 ஆம் ஆண்டில் டியாகோ மரடோனா என்ற ஒரு இளைஞனின் மாயவித்தைகளில் பெரும்பான்மையான இந்திய ரசிகர்கள் வீழ்ந்தனர். அதனால் தான் அர்ஜென்டைனா இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

1986 மற்றும் அதற்கு பிந்தைய உலகக் கோப்பைகளில் மரடோனாவின் மந்திர விளையாட்டு, தலைமுறைகளாக கடத்தப்பட்டு, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இயல்பாகவே அந்த அணியின் ரசிகர்களாக மாறினர்.

அர்ஜென்டைனா ஒரு சராசரி அணியாக இருந்தாலும், பாடிஸ்டுடா, ரிக்வெல்மே மற்றும் இப்போது மெஸ்ஸி போன்ற அற்புதமான வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தான் இந்தியாவில் அர்ஜெண்டைனாவின் ரசிகர்களை உருவாக் குவதில் பெரும் பங்களித்தவர்கள்.

ஃபிஃபா உலகக் கோப்பை முதன் முதலில் 1954 -இல் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, ஆனால் இந்தியாவில் 1986 முதல், அனைத்து போட்டிகளும் தூர்தர்ஷனில் நேரடியாக காட்டப்பட்டன.

அது 1990 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நமக்கு கிடைத்தன, அதன் பிறகு எந்த விளையாட்டையும் பார்ப்பதில் எந்தப் பிரச்சினையும் நமக்கு இருந்ததில்லை. இப்போது கால்பந்தாட்டம் உலகில் மிகவும் பரவலாகப் பார்க்கப்படும் மற்றும் பின்பற்றப்படும் விளையாட்டு நிகழ்வு ஆகும்.

கால்பந்து என்பது ஒரு சர்வதேச மொழி போன்றது, இது கலாச்சார தடைகளை கடந்து, விளையாட்டின் மீதான நம் அன்பை, உலகம் முழுவதும் உள்ள மற்ற ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை அனுமதிக்கிறது.

நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கால்பந்து விளையாட்டு ரசனையுள்ளவர்களை, பொது ஆர்வம் என்கிற புள்ளியில் இணைத்து விடுகிறது. ஏனெனில் உண்மையான கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியுடன் இணைந்திருப்பதை உளப்பூர்வமாக உணர்கிறார்கள்.

எனவே இது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் பற்றியது. இவையிரண்டும் புழங்கும் சூழலில், சில நேரங்களில் “பைத்தியக்காரதனமும், பித்துக்குளித்தனமும் பீறிட்டு விடுகிறது. இது இந்த விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்களுக்கு, அதீத முட்டாள்தனமான செயலாக முகம் சுழிக்க வைக்கிறது.

இது அடிப்படையில் பார்வையாளனின் ரசிகத்தன்மையின் உடனடி வெளிப்பாடாகும், தனது உணர்வுகளை முழு அளவில், உரக்க கூச்சலிட்டு எளிதாக வெளிப்படுத்தி விடுகிறார்கள். ஆட்டம் நிகழ்கிற போது, அரங்கத்தில் இருப்பவர்களும், தொலைதூரத்து பார்வையாளர்களும் தங்கள் அணி வீரர்கள் மேன்மையானவர் என்று நிரூபிக்க விரும்புகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, விளையாட்டு மைதானம் என்பது உலகம் முழுவதும், ஒரு நாகரிக பாணியில் மற்றும் ஆரவார தொனியில் தன்னுடைய அனைத்தும் சிறந்தது என்பதை காட்ட கூடிய களமாக கருதப்படுகிறது. இந்த உள்ளார்ந்த விஷயம் ஒரு மைதானத்தில் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுடன் சேரும்போது மேலும் உத்வேகம் பெறுகிறது.

பெரும்பாலான நாடுகள் அனைத்து விளையாட்டுகளுக்கும் இணையான முக்கியத்துவமும், ஊக்கமும் தருகின்றன. ஒரு சில விளையாட்டுகளில் அவர்கள் உச்சம் தொடுவதால் மற்ற விளையாட்டுகளை கைவிடுவதில்லை.

இந்தியாவில் நிலைமை அப்படியாக இல்லை. இந்திய கால்பந்தின் பிரச்னை என்பது விளையாட்டை விளையாடு பவர்களின் கை(கால்)களில் இல்லை. அதை ஆள்பவர்களிடம்/வழி நடத்துபவர்களிடம் இருக்கிறது. குறைவான ஊடக பார்வை மற்றும் பற்றாக்குறையான அனுசரணை போன்ற வையும் கூட ஒரு பெரிய காரணியாக பங்கு வருகின்றன

இந்திய கால்பந்து அணி, உலக தரத்தில் சிறந்த ஒன்றாக இருக்க கடினமாக உழைத்து வருகிறது, விளையாட்டின் மீதான ஆர்வம் சந்தேகத்திற்கு இடமின்றி வளர்ந்து வருகிறது. அடுத்த அல்லது அதற்கடுத்த உலகக்கோப்பை விளையாட்டில்
நம் இந்திய அணி கால்பதிக்கும் என்று நாம் காண்கிற கனவை நம்மால் நிறுத்த முடியாது.  கனவு மெய்ப்பட வேண்டும், கை(கால்) வசமாவதுவிரைவில் வேண்டும்..

… இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top