Close
நவம்பர் 22, 2024 7:42 காலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஆட்டுக்கிடாய் முட்டுப் போட்டி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 2 வது ஆண்டாக கிடாய் முட்டு போட்டி நடந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போலவே ஆட்டுக்கிடாய் முட்டும் போட்டியும் தென் மாவட்டங்களில் பிரபலமாக நடத்தப்படும் போட்டியாகும்.

இந்தப்போட்டிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கடந்த 2022 -ஆம் ஆண்டில் நீதிமன்றத்தின் அனுமதியுடன்  தென் மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கிடாய் முட்டும் போட்டி உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. அதே போல நிகழாண்டிலும் கிடாய் முட்டும் போட்டிகளை நடத்த  பல்வேறு அமைப்பினர் தயாராகி வந்தனர்.

இந்நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் 2 வது ஆண்டாக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு சண்டை (15.3.2023)  நடந்தது.

சிவகங்கை
திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் நடந்த கிடாய் முட்டு போட்டியில் பங்கேற்க வந்த கிடாய்

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 115 கிடாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து கிடாய்களுக்கும் சில்வர் பானை வழங்கப்பட்டு துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட 115 கிடாய்களையும் கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர்.

அதிக முறை முட்டிய கிடாய்களுக்கு கட்டில், பீரோ, நாற்காலி, பித்தளை அண்டா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் கிடாய் 60 முறை முட்டியது.

கிடாய்களுக்கு உரிமையாளர்கள் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து போட்டிக்கு அனுப்பினர். புழுதி பறக்க நடந்த கிடாய் சண்டை போட்டிகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

மோதலுக்கு 60 முட்டுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதற்குள் சோர்ந்துவிடும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டன. கிடாய்களின் பற்களின் எண்ணிக்கை அடிப்படையில்( 6, 8, 10) பிரிவுகள் நிர்ணயித்து போட்டிகள் நடத்தப்பட்டன.

திருப்புவனம் அருகே அதிகரை கிராமத்தைச் சேர்ந்த கிடாய் வளர்த்து வரும் இளைஞர் த. ராமகிருஷ்ணன் கூறியதாவது:

கிடாய் முட்டுக்கு நீதிமன்றம்  தடை விதித்தது. 5 ஆண்டுகளுப்பின் சென்ற ஆண்டு  திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் இளைஞர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கிடாய் முட்டு போட்டியை நடத்தினர்.

அதே போல  இரண்டாவது ஆண்டாக தற்போது  நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்களோடு  திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் கிடாய் முட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறும் நிலையை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு உரிய அரசாணை வெளியிட்டால் சிரமங்கள் குறையும்.  அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க  வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top