சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வினைப் பாராட்டி அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. புத்திசாலித்தனம், கடின உழைப்புடன் அவர் விளையாடியதற்காக அஸ்வினுக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி அவரது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் அதிக ஆஃப் பிரேக் பந்துகளை வீசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் கேரம் பால் போட்டு அனைவரையும் போல்டு ஆக்கிவிட்டார் அஸ்வின் என்றும் வருத்தமுடன் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இளம் வீரராக டெஸ்ட்டில் அறிமுகமாகி 5 விக்கெட்கள் வீழ்த்தியதையும், 2011ம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பை வென்ற அணியில் அஸ்வின் இடம்பிடித்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். 2013ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அஸ்வினுக்கு மோடி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, குடும்பத்தினரை தொடர்புகொள்ள இயலாத சூழலிலும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாடியதையும் தாய் மருத்துவமனையில் இருந்தபோதும் நாட்டுக்காக அவர் விளையாடியதையும் மோடி தனது பாராட்டுக் கடிதத்தில் நினைவுபடுத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டுகள் சார்ந்த குட்டிக் குட்டி கதைகளை, நினைவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் அஸ்வினை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.