Close
ஜனவரி 22, 2025 12:50 மணி

சர்வதேச அளவில் சாதித்த குகேஷ்க்கு கேல் ரத்னா விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்..!

கேல் ரத்னா விருதுகளை வழங்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து நாட்டுக்கு புகழ் சேர்த்த குகேஷ், மனு பாகர், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் ஆகியோருக்கு நேற்று (17ம் தேதி ) டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கௌரவித்தார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் 2024ம் ஆண்டு சர்வதேச அளவில் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் பட்டியல் வெளியானது. விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் ‘கேல் ரத்னா’ விருது, இந்தமுறை நான்கு விளையாட்டு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் குகேஷ் (18) சீனாவின் டிங் லிரெனை (32) வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கம் வெல்ல கைகொடுத்தார். இவருடன், மனு பாகர், ஹர்மன்பிரீத் சிங், பிரவீன் குமார் ஆகியோரும் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று (17ம் தேதி) குடியரசுத் தலைவர் மாளிகையில், நடந்த விழாவில், இந்த நான்கு பேருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘கேல் ரத்னா’ விருது வழங்கி கௌரவித்தார். அதேபோல், ஜோதி (தடகளம்), சலிமா, ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், சஞ்சய் (ஹாக்கி), நவ்தீப் சிங், சிம்ரன், ஹொகாடோ, தரம்பிர், பிரனவ் சூர்மா, சச்சின் கிலாரி, தீப்தி ஜீவன்ஜி, பிரீத்தி பால் (பாரா தடகளம்), நிதேஷ் குமார் (பாரா பாட்மின்டன்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அமன் ஷெராவத் (மல்யுத்தம்),

சாஜன் பிரகாஷ் (நீச்சல்), அபே சிங் (ஸ்குவாஷ்), சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே (துப்பாக்கி சுடுதல்), ருபினா, மோனா (பாரா துப்பாக்கி சுடுதல்), கபில் பார்மர் (பாரா ஜூடோ), ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை), வந்திகா (செஸ்), நித்து காங்கஸ், சவீட்டி (குத்துச்சண்டை) உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top