Close
மே 7, 2025 3:10 மணி

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு..!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்,வீராங்கனைகளை வாழ்த்திய கலெக்டர் கலைச்செல்வி

இரண்டாவது ஆசியா அளவிலான யோகாசன விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் காஞ்சி வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இரண்டாவது ஆசிய அளவிலான யோகாசன விளையாட்டு போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 , 26,27 ஆகிய தேதிகளில் டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் 21 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இப் போட்டிகளில் இந்தியா 83 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் ஆறு தங்க பதக்கங்களை வென்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த மாமல்லன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ஓவியா இரண்டு தங்கப் பதக்கங்களையும், சுப்புராய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் தேவேஷ் 2 தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆசிய அளவிலான யோகாசன போட்டியில் தங்கம் பதக்கம் வென்றும், அடுத்த ஆண்டு ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் யோகா பிரிவில் பங்கேற்கும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் அரசு ஊழியர்கள் கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க இயலும் என்பதும், இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் யோகாசனம் ஒரு பிரிவாக சேர்க்கப்பட்ட நிலையில் அதில் இவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாணவி ஓவியா கூறுகையில், ஆசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியா மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கடுமையான பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top