Close
செப்டம்பர் 20, 2024 3:38 காலை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று தேசிய அளவிலான வாலிபால் போட்டியை தொடக்கி வைத்து பேசிய மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியை மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தொடக்கி வைத்தார்.
வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டி (ஜூலை 8, 9, 10) ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது.

ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொண்டன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
முன்னதாக போட்டியை மாநில சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு வாலிபால் கழகமானது 3 ஆண்டுகள் முடக்கி வைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அந்த கழகத்தினரிடம் பேசி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்று தனித்துவமாக செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விளையாட்டு துறையில் அனைத்து பிரிவுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர். இந்திய ஹாக்கி அணியில்கூட தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள், ஆசிய அளவில் பதக்கம் பெறுவதற்கான பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
சென்னையில் ஜூலை 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவானது உலகமே வியக்கும் வகையில் நடைபெற உள்ளது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடியில் சர்வதேச தரத்தில் உள் விளையாட்டு அரங்கம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் ரூ.700 கோடியில் ஸ்போர்ட்ஸ் சிட்டி விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதேபோன்று தமிழகத்தில் தொகுதிக்கு ரூ.3 கோடியில் சர்வதே தரத்தில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

இந்த வாலிபால் போட்டியை  ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஒரு பகுதிக்கு தலா 100 அடி நீளத்துக்கு 8 அடுக்குகள் என மொத்தம் 4 பகுதிகளிலும் கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

மைதானத்தில் இருளை பகலாக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.தினமும் மாலையில் சுமார் 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை போட்டிகள்  நடைபெற்றன. இதில் இரு பிரிவுகளிலும்  சாம்பியன் கோப்பை வென்ற அணிகள் விவரம் திங்கள்கிழமை தெரியவரும் என  வடகாடு அண்ணா கைப்பந்து கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top