Close
செப்டம்பர் 20, 2024 4:14 காலை

திருவொற்றியூர், மாதவரத்தில் தலா ரூ.3 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்குகள்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற 43 வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டிகளில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக அணிக்கு வெற்றிக்கோப்பையை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ. மெய்யநாதன்.

 சென்னை  திருவொற்றியூர்,  மாதவரம் தொகுதிகளில் தலா ரூ. 3 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் விரைவில் அமைக்கப்படும் என இளைஞர் நலன், விளையாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் தெரிவித்தார்
 தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் சார்பில்  43- வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகள் சென்னை திருவொற்றி யூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில்  தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா,  கர்நாடகா,  புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகளில் சுமார் 172 வீரர், வீராங்கனைகள்  போட்டியில் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகமும்,  மகளிர் பிரிவில் கர்நாடக அணியும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.
இந்நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா திருவொற்றியூர் மாநகராட்சி பூந்தோட்ட பள்ளியில் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  சட்டப்பேரவை உறுப்பினர் கேபி சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  இளைஞர் நலன், விளையாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், கேடயங்கள், பதக்கங்கள், பரிசுத்தொகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, பல்வேறு விளையாட்டு போட்டிகளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட கோகோ, கபடி, சிலம்பம் உள்ளிட்டவை இன்று உலக அளவில் பிரபலமடைந்துள்ளன. இதே போல பூப்பந்து  விளையாட்டும் தஞ்சாவூரில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்போ போட்டியை இந்திய அளவிலும் உலக அளவில்  எடுத்துச் செல்ல வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
 திருவொற்றியூர் மாதவரம் பகுதிகளில் உள் விளையாட்டு அரங்கங்கள்:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கங்களை அமைக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது.  அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 10 தொகுதிகளில் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
இதில் உடனடியாக திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளில் தலா ரூ.3 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் கட்டிட பணிகள் நிறைவுற்ற பிறகு பல்வேறு விளையாட்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி உலக தரத்திலான உள் விளையாட்டு அரங்கங்களாக தரம் உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, திமுக மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் எம்.எல். ஏ.,  மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாநில பூப்பந்தாட்ட கழக பொதுச்செயலாளர் வி.எழிலரசன், போட்டி நிர்வாகிகள் தயாளன், நந்தா, மாரிமுத்து, கே.சுப்பிரமணி மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top