Close
நவம்பர் 22, 2024 12:56 மணி

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான போட்டிகளில் வென்றவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசளிப்பு

புதுக்கோட்டை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முன்னோட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளித்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதா ராமு

மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை  சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட நிருவாகம் சார்பில், மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டு போட்டிகள் வினாடி வினா  போட்டிகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  பாராட்டி பரிசுத் தொகைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சரின்  சீரிய முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழகத்தில் 44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை சிறப்பாக நடத்தி நமது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இப்போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டம், நடைப் பேரணி, இரு சக்கர வாகனப் பேரணி, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள், நீச்சல் குள சதுரங்கப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பம்சமாக மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினா போட்டிகள் 21.07.2022 அன்று இணையதளம் வாயிலாக நடைபெற்றது. இப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 338 நபர்களும், பிற மாவட்டங்களிலிருந்து 74 நபர்களும் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 5 நபர்களும், பிற மாவட்டங்களை சார்ந்த 5 நபர்களும் தரவரிசை அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டு, அவர்களிடை யே நேரடியாக வினாடி வினா போட்டிகள்  நடைபெற்றது.

இப்போட்டியில் முதலிடம் பெற்ற அன்பு முத்தையா என்பவருக்கு ரூ.16,500 மதிப்புடைய 3 கிராம் தங்கமும், இரண்டாமிடம் பெற்ற அமுதன் உதயப்பன் என்பவருக்கு ரூ.11,000 மதிப்புடைய 2 கிராம் தங்கமும்;, மூன்றாமிடம் பெற்ற ஸ்ரீராம் என்பவருக்கு ரூ.5,500 மதிப்புடைய 1 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
எனவே மாணவ, மாணவிகள் தங்களது படிப்புடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  தெரிவித்தார்.
இந்த வினாடி வினா போட்டிகளை குயிஸ் மாஸ்டர் வெங்கடேஷ் ஸ்ரீனிவாசன், விஜய பிரபாகரன் ஆகியோர் நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top