Close
நவம்பர் 22, 2024 12:09 மணி

விநாயகர் சதுர்த்தி…புதுக்கோட்டை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு

புதுக்கோட்டையில்  விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் நடப்பதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி விழா 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே மாவட்டம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அவைகள் மூன்று நாள்களுக்குப்பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சில பகுதிகளில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே கறம்பக்குடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.

கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சிலை ஊர்வலம்  நடத்தப்படாமல் இருந்தது.  இதன் தாக்கம் குறைந்ததால், தமிழக அரசு தற்போது பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. அதன் காரணமாக நிகழ் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை  விமர்சையாக நடத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ் ஆண்டில்  இந்து அமைப்புகள் விநாயகர் சிலை ஊர்வலத்தை பிரமாண்டமான முறையில் நடத்த உள்ளதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில் புதுக்கோட்டை கீரனூர், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதன் மூலம் எந்தவித அசம்பாவிதங்களையும் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பை  உறுதி செய்வதற்கும் காவல்துறை தயாராக உள்ளது என்பதை  உணர்த்தும்  வகையில் கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை
கொடி அணி வகுப்பில் பங்கேற்ற காவல்துறையினர்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய  கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர்  கலவரங்களை தடுக்க பயன்படுத்தும் உடைகளை அணிந்து சென்று, கொடி அணிவகுப்பை நகரின் முக்கிய வீதிகள் வழியாக  சென்று மீண்டும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறைவு செய்தனர்.

 மாவட்டத்தில் இது வரை விநாயகர் சதுர்த்தியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top