Close
நவம்பர் 22, 2024 12:40 காலை

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள் ரகுபதி-மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பள்ளியில் நடைபெற்ற காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி, திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற, முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட நிகழ்வில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  (16.09.2022) தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.

பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது:

இத்திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற் கட்டமாக 8 நகராட்சி தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,322 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளும் உயர் தரத்திலான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை” தொடங்கி வைத்துள்ளார்கள்.
இத்திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதன் மூலம் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருகை தரவும், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையிலும், கல்வியில் முழுகவனம் செலுத்தி பாடத்தை முறையாக படித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவி களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வரும்காலங்களில் தமிழகம் இந்தியாவிற்கே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக விளங்க முதலமைச்சரால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் ரகுபதி.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரால் கல்வித்துறையில் மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு முன்னோடி திட்டங்களால் தமிழகம் 89 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாகவும், 51 சதவீதம் நபர்கள் உயர் கல்வி பயில்பவர்களாகவும் உள்ளனர்.

மேலும் அனைத்து குழந்தைகளும் தொடக்க கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில்  முதலமைச்சர்  பள்ளிக்கல்வித்துறைக்கும் மட்டும் ரூ.36,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும் வறுமையின் காரணமாக எந்த ஒரு நபரும் கல்வியை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன் பெற்றோரின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைத்துள்ளார்கள்.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதுடன், அவர்களுக்கான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், படிப்பில் கவனம் செலுத்தவும் உறுதுணையாக உள்ளது என்றார்  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

இதில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகா ராணி, நகராட்சி ஆணையர் நாகராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top