Close
நவம்பர் 22, 2024 12:36 காலை

மாநில கல்விக்கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

மாநில கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகள் தொடர்பான  ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளோடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட கிளை, அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பு கள் இணைந்து தமிழக அரசு புதிதாக வெளியிடவுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் பங்கேற்று,  மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது சார்ந்து அறிவியல் இயக்கம் முன்னெடுக் கும் பணிகளையும், இன்றைய காலத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் புதிய தேசிய கல்விக் கொள்கை எந்த அளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது சார்ந்தும் இவற்றில் இருந்து நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசி ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாநில அரசு கொண்டுவரும் கல்விக் கொள்கை யானது ஏற்கெனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது என்பதையும், ஏற்றத்தாழ்வுகளோடு உள்ள கல்வி கொள்கையாக தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளதாகவும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, தனித்தன் மையான, நம் மாநில சுற்றுச்சூழலுக்கு ஏற்ப கல்விக் கொள்கையை அரசு வெளியிட வேண்டும் என்பது சார்ந்தும் பேசினர்.

இதில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இரு மொழி கொள்கையே தொடர்ந்து நிலவ வேண்டும், பாடம் நடத்தும் பணியை முதன்மையாகவும் ஆசிரியர்களுக்கு பிற பணிகளை வழங்கக் கூடாது. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை நினைவாக்கும் வகையில் அரசு பள்ளிகளை காக்க வேண்டும், தொடக்கநிலை வகுப்புகளுக்கு மாநில அளவில் தேர்வுகள் நடத்துவதை கைவிட்டு அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

புதுக்கோட்டை

ஓர் ஆசிரியர் பள்ளிகளை ஈராசிரியர் பள்ளிகளாக செயல் படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 சதவீதத்தை கல்விக்கு மட்டும் தனியாக ஒதுக்கி பொதுக்கல்வியை வளர்த்தெடுக்க வேண்டும்.

உயர் கல்வியில் ஆண்டுக்கு ஒரு சான்றிதழ் வழங்கும் நிலையை கைவிட்டு முழுமையான கற்றலை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் படைப்பாற்றல், தர்க்க சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவு சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவியல் பூர்வ கல்வியை வழங்க வேண்டும்.மேல்நிலைப் பள்ளிகளில் மனநல மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.

காலை உணவு வழங்கும் முறையை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், எனவும் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.  முன் தொடக்க கல்விக்கு புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை புள்ளி விவரங்கள் தரும் அலுவலர்களாக பயன்படுத்த வேண்டாம், மாணவர்களி டையே போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும், மாநில அரசு வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டு பின்னர் கருத்துகள் கேட்ட பிறகு முழுமையான மாநில கல்விகொள்கையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட
100 க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை மாநில கல்விக் கொள்கையில் இணைக்கும் வகையில் முன் மொழிவாக கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைகளை தொகுத்து வரும் 25 -ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் 8 மாவட்டங்கள் அடங்கிய கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு பின்னர் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து அறிவியல் இயக்கம் ஒரு அறிக்கையாக தமிழக அரசிடம் வழங்கவுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் ஆலோசனை கோரிக்கைகள் தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற தேவை யான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதில் ,அறிவியல் இயக்க நிர்வாகிகள் அ.மணவாளன், லெ.பிரபாகரன், ம.வீரமுத்து, ஆர்.ராஜ்குமார், ஆர்.விவேகானந்தன், கே.ஜெயபாலன், அறிவுடைநம்பி, ரகுமான், பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ச.அலெக்சாண்டர், என்.ரவிச்சந்திரன், ஆர்.சரவணன், கே.செல்வராஜ், ஆ.மணிகண்டன், மா.குமரேசன், ஜீவன், க.செந்தில், கோ.வள்ளியப்பன், ஆ.மார்டின், அ.கமலம் பேராசிரியர்கள் விஸ்வநாதன், காந்தி, தயாநிதி, புதுகை செல்வா உள்ளிட்டோர் பேசினர்.

இதில், பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சங்க பிரதிநிதிகள், கல்வியாளர்கள், வட்டார கல்வி அலுவலர், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் டி.விமலா  நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top