புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் விழிப்புணர்வு பயிற்சி பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் பேசியதாவது:
கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உள்ளிட்ட வரலாறுகளை அறிய மாணவர்கள் மத்தியில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைத்து பழங்கால நாகரிகங்கள் வாழ்விடங்கள் சுற்றுலா அழைத்துச் சென்று போதிய பயிற்சிகள் வழங்கவும், அறிவியல் பூர்வமாக வரலாறுகளை கொண்டு செல்லஅனைத்தும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தொன்மை பாதுகாப்பு மன்றம் தொடங்கி செயல்படுத்தப்படும் என்றார்.
இரண்டு நாள் பயிற்சி குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் கா.நெல்சன் பேசினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ராஜ்குமார், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை.செந்தில்,பள்ளி துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து வாழ்த்தி பேசினர்.
பயிற்சி கருத்தாளர்களாக அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறை இணைநிலை பேராசிரியர் முனைவர் ராஜவேல், தமிழ் எழுத்தில் தோற்றம் வளர்ச்சியை எவ்வாறு வட இந்திய சோகப் பிராமி எழுத்துக்களில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது என்பது சார்ந்தும், தமிழ் மக்களாலேயே தமிழ் எழுத்துக்கள் தனித்தன்மையோடு தனித்து வளர்ந்து வந்தது என்பது குறித்தும் உயிர் எழுத்துக்கள் தோற்றம் வளர்ச்சி இன்றைய பயன்பாடு ஆகியவற்றில் தமிழ் மொழிக்கு உள்ள தனிச்சிறப்பு குறித்தும், கல்வெட்டு ஆராய்ச்சி குறித்தும்,சங்க கால கோட்டை குறித்தும் பயிற்சி வழங்கினார்.
இப்பயிற்சியில் கருத்தாளர் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி.எஸ். தனபதி ஆகியோர் செயல்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாங்கம், முத்துக்குமார், மஸ்தான் பகுருதீன், பழனிச்சாமி,வாசுகி, கமலம், கஸ்தூரி ரங்கன், ரகமதுல்லா, கணேஷ் பூபதி, கமலம், கவிஞர் பீர் முகம்மது, மன்னர் கல்லூரி மாணவர்களும், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் . நிறைவாக உதவி சுற்றுலா அலுவலர் முத்துசாமி நன்றி கூறினார்.