புதுக்கோட்டையில் அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் ஐம்பெரும் விழா விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை அம்பிகா கல்வி அறநிலையத்தின் ஐம்பெரும் விழா (புத்தக வெளியீடு, புதுக்கோட்டையின் சிறந்த சமூகச் சான்றோர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தல், அர்ப்பணிப்பு ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல், இலட்சிய ஆசிரியருக்கு விருது வழங்கி கௌரவித்தல், சிறப்பாசிரியர்களுக்கு – இலட்சிய ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தல்) சனிக்கிழமை (8.10.2022) புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்தில் உள்ள அம்பிகா கல்வி அறநிலைய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் முதலில், திருவள்ளுவர் படம், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே மற்றும் மற்றும் அம்பிகா அறநிலைய நிறுவனர் மருத்துவர் ரவீந்திரன் தந்தை அம்பிகா ஆகியோரது உருவப்படத்தை முறையே ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் திறந்துவைத்தனர்.
அடுத்து அம்பிகா கல்வி அறநிலைய இயக்குநர் சந்திரா ரவீந்திரன் எழுதிய புதுகை முத்துக்கள் புகழ்மிக்க சொத்துக்கள் என்ற நூலை மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட புண்ணியமூர்த்தி பெற்றுக் கொண்டார். நூலிற்கு தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் மதிப்புரை வழங்கினார்.
இதையடுத்து அம்பிகா கல்வி அறநிலையம் சார்பில் இலட்சிய ஆசிரியர் விருது, விழா மலரை ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவாஜி வெளியிட, ஓய்வு பெற்ற ஆசிரியை விஜயலட்சுமி பெற்றுக்
கொண்டார் .மருத்துவர் ந.ஜெயராமன் மலருக்கு மதிப்புரை வழங்கினார்.
பின்னர், சொல்லருவி முத்து சீனிவாசன், கவிச்சுடர் கவிதைப்பித்தன், வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஜெ. ராஜாமுகமது, செம்பை மணவாளன், பேராசிரியர் சா.விஸ்வநாதன், சண்முக பழனியப்பன் உள்ளிட்ட 11 பேருக்கு ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையின் சிறந்த சமூக சான்றோர் விருது வழங்கி சிறப்பித்தார்.
இதையடுத்து மிகச்சிறப்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஆசிரியர்கள், புலவர் துரை.மதிவாணன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதையும் தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் நல்லாசிரியர்கள் 64 பேருக்கு இலட்சிய ஆசிரியர் விருதும்,
ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற பாடங்களில் சிறப்பாசிரி யர்களாக பணியாற்றும் 11 பேருக்கு இலட்சிய ஆசிரியர் சிறப்பு விருதும் மருத்துவர் ச.ராம்தாஸ் வழங்கி சிறப்பித்தார். விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விருது பெற்றவர்களை ஓய்வுபெற்ற ஆசிரியர் சதாசிவம் பாராட்டிப் பேசினார். முன்னதாக மருத்துவர் பீட்டர் வரவேற்றார். நிகழ்ச்சியை அம்பிகா அறநிலைய இயக்குனர் சந்திரா ரவீந்திரன், வி.ஜெயராணி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியை அம்பிகா அறநிலைய நிறுவனர் மருத்துவர் ரவீந்திரன், மருத்துவர் முத்தமிழ் வீணா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிறைவாக அம்பிகா கல்வி அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் முனைவர் செந்தமிழ் வீனா நன்றி கூறினார்.