கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 11.10.2022 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி தலைமை வகித்து பேசுகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், இன்று பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், அனைத்து விதமான போட்டித்தேர்வுகளிலும் கலந்து கொண்டு தேர்வு பெற்று உயர்ந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
சிறப்பு அழைப்பாளராக, அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா பேசுகையில், உலகெங்கிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 -ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 -ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில், குழந்தைத் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறை, கல்வி உரிமை மற்றும் பல பிரச்சினைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மேலும், பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச பெண் குழந்தைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாலா, சகுந்தலா, மாற்றுத்திறன் குழந்தைகள் ஆசிரியர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாக்கிய ராஜ் வரவேற்றார்.நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.